2006/06/21

சொர்கத்துக்குப் போகிறேன்!

வேறு ஒன்றுமில்லை - கோடை விடுமுறைக்காக சென்னைக்குப் போகிறேன். துபாய்வாசி கொஞ்ச நாள் சென்னைவாசியாக இருந்து விட்டு வருகிறேன்.

இராமராஜன் 'ஸ்டைலில்' சொல்லலாம் என்று தான் இத்தலைப்பு.

எத்தனையோ பிரச்சினைகள் - விமான நிலையத்தில் தொடங்கி, பேருந்தில் இடிபட்டு, ஆட்டோ ஓட்டுநர்களிடம் சண்டை போட்டு, இரங்கநாதன் தெருவில் நுழைய கஷ்டப்பட்டு, பின்னர் நுழைந்தபின் ஏண்டா நுழைந்தோம் என நினைத்து - என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? ஆயிரம் தான் இருந்தாலும்................. ஆயிரத்து ஒன்னு ஆகுமா?

சாத்தான் ஊருக்கு போறாரு, நிலவு நண்பன் ஊருக்கு போறாரு, நாம மட்டும் இங்கே என்ன செய்யறதுனு தான் நானும் கிளம்பிட்டதா நினைக்க வேண்டாம். எல்லாம் திட்டமிட்ட விடுமுறை தான். ( திட்டமிடாவிட்டால், இக்கோடைக்காலத்தில் விமானத்தில் இடமும் கிடைக்காது என்பது வேறு விஷயம்).

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் எழுதத்தான் போறீங்க. எழுதுங்க, ஆனா என் கிட்டே இருந்து பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்காதீங்க! அப்படியும் யாருக்காவது கிடைத்தால், அவர்கள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என் நினைத்துக்கொள்ளலாம் (இல்லை எனக்கு சென்னைக்குப் போயும் புத்திவரவில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம் அல்லது இவன் சென்னையில் இருந்தாலும் துபாயில் இருந்தாலும் தொந்தரவு மட்டும் நம்மை விடுவதில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம்)).

வர்ர்ர்ர்ர்ட்டா?

எச்சரிக்கை: போயிட்டு வந்து அடிபட்ட, இடிபட்ட அனுபவம் ஏதாவது இருந்தால் எழுதுவேன்!

2006/06/19

நீங்கள் கருப்பா?

அட தப்பா எடுத்துக்காதீங்க! இது இனவெறி சம்பந்தப்பட்ட பதிவு இல்லை.

பூக்களில் எத்தனையோ நிறம் இருப்பது போல, வலைப்பூக்களின் வண்ணங்களும் ஏராளம் ஏராளம். அவரவர் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்களின் பதிவுகளின் வண்ணங்களை அமைத்துள்ளனர்.

ஆனால், கருப்பு பலகையில் எழுதியதைப் போன்று இருக்கும் சில வலைப்பூக்களைப் படிக்க சிரமம் இருக்கிறது. கருப்பு வெள்ளை எழுத்துக்கள் அழகாகத்தான் இருக்கின்றன. அதை படித்து முடித்து மற்ற ஒரு பதிவையோ அல்லது வேறு ஒரு வலையகத்தையோ பார்க்கும் போது, அது கண்களுக்கு மிக வேலையைக் கொடுக்கிறது. கண் சுருங்கி விரிவதால் அதற்கும் கஷ்டம் (strain) தானே? இம்மாதிரி எழுதுபவர்கள் எல்லாரும் நன்றாக வேறு எழுதுகிறார்கள் - படிக்காமலும் இருக்க முடிவதில்லை. குறைந்தது இந்த வண்ணத்தை மாற்றினார்களேயானால், கொஞ்சம் நல்லது - என்னைப்போன்ற 'மிருதுவான' கண் கொண்ட எத்தனையோ பேருக்கு!

இது ஒரு வேண்டுகோளே, கட்டாயம் இல்லை. முடிந்தால் வண்ணத்தை மாற்றுங்கள், இல்லாவிட்டாலும் உங்கள் வலைப்பூ படிக்கப்படுமே!

பி.கு. : பூக்களில் கூட கருப்புப்பூ ஏதும் இல்லையாம்!

2006/06/14

கடவுள் செய்த பாவம்!

என்னைக்கவர்ந்த பாடல். என்ன படம் எனத்தெரிந்தவர்கள் கூறவும்.

எப்போதுமே உலக நிகழ்வுகளுக்கு ஒத்துப்போவதால் என்பதாலா அல்லது MGR பாடல் என்பதாலா எனத் தெரியாது. ஆனால் மிகவும் பிடிக்கும்!

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
இந்த மனிதன் கொண்ட கோலம்

பொருளேதும் இன்றி கருவாக வைத்து
உருவாக்கி வைத்து விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்

கடவுள் செய்த பாவம்……..

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும்போதும் தெரிவதில்லை
பாழாய்ப்போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்குப் பின்னால் சீறும்
முகத்துதி பேசும், வளையும், குழையும்
காரியம் ஆனதும் மாறும்
காரியம் ஆனதும் மாறும்

கடவுள் செய்த பாவம்……..

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ்ஜாதி
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே

நடப்பவை யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும்
உலகம் உருப்படியாகும்!


கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
இந்த மனிதன் கொண்ட கோலம்

படம்: தெரியவில்லை (MGR நடித்தது)
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

2006/06/12

அமீரகவாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்

இரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வு நமது வலைப்பூ நண்பர்களுக்கு நிறையவே உண்டு என எண்ணுகிறேன். திரு. யாத்ரீகன் தனது இப்பதிவில் எழுதியிருப்பது ஒரு உதாரணம். (மற்றவர்கள் எழுதிப் படித்திருக்கிறேன், ஆனால் நினைவிலில்லை).

பதிவிற்குண்டான விஷயத்திற்கு வரும் முன், அமீரகத்தில் இருக்கும் இரத்த தானம் பற்றிய சில விவரங்களைத் தர விரும்புகிறேன் (மற்ற வலைப்பதிவாளர்களுக்காக!).

இங்கு அரசாங்க மருத்துவ மனைகளில் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்ய வருபவரின் இரத்தம் முதலில் பரிசோதிக்கப்படுகிறது (முக்கியமாக எய்ட்ஸ் மற்றும் அவரது இரும்புச்சத்து அளவு). அவைகள் ஒத்துப்போனால் இரத்தம் அவரிடமிருந்து பெறப்படுகிறது.

மேலும் சில நேரங்களில், இரத்த வங்கியின் இருப்பு குறைவாகும் போது சில அலுவலகங்களுக்கு (என்னுடைய அலுவலகம் அதில் ஒன்று) சென்றும் இரத்தம் சேகரிக்கப்படும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தத்தினை அவர்கள் இலவசமாக எடுத்துக்கொள்வதில்லை. தி. 200 கொடுப்பார்கள்.

முதல் இரண்டு தடவை தானம் செய்யும் போது இப்பணம் கொடுக்கப்பட மாட்டாது. மூன்றாவது தடவையாக கொடுக்கும் போது மட்டுமே தரப்படுகிறது. முன்பு இரண்டாவது தடவையே தரப்பட்ட பணம், இப்போதெல்லாம் மூன்றாவது தடவையாக கொடுக்கும்போது மட்டுமே தரப்படுகிறது. காரணம் சில பேர் 'பணத்திற்காக' மட்டுமே கொடுக்கிறார்கள் என்பதால்!

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு அமைப்பு (சென்னை சேரிட்டி) இம்மாதிரியான இரத்த தானங்களை ஒருங்கினைத்து மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை அரசாங்க மருத்துவமனையில் நடத்துகிறது. இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தம் கொடுப்பவர்களிடம் இருந்து பெறும் பணத்தினை சேகரித்து சென்னையில் இருக்கும் அநாதை ஆஸ்ரமங்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் அனுப்பி வருகிறது இவ்வமைப்பு.

இதில் இரண்டு நல்ல விஷயங்கள். ஒன்று கொடுத்த இரத்தம் இங்கே தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறது. அதில் கிடைக்கும் பணம், பல நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுகிறது.

இதில் நானும் இதுவரை 4 தடவை பங்கு பெற்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் சொல்லிக்கொள்கிறேன். போன தடவை ஒரு லாரி ஓட்டுநரை அம்முகாமில் சந்தித்தேன் (அவரது சம்பளம் மாதம் தி. 600 மட்டுமே!). அவர் இது வரை தன் வாழ்நாளில் 200 தடவை இரத்தம் அளித்திருக்கிறாராம் (இந்தியாவில் இருந்தே அவர் ஆரம்பிது விட்டார்). அவருக்கு முன்னால் நான் அளித்திருக்கும் தானங்கள் ஒன்றுமே இல்லை!

இங்கிருக்கும் சிலருக்கு ஒரு மனநிலை, அதாவது அவர்களுடைய இரத்தம் வெளிநாட்டினருக்கு எல்லாம் உபயோகப்படக்கூடாதாம்! இந்தியருக்குத் தான் கொடுப்பார்களாம்! உயிரில் கூட தேசியம் பார்க்கிறார்கள் - நொண்டிச்சாக்கு! அப்படி நினைக்கும் நபர்கள் கூட இம்முகாமில் பங்கு பெற்றால், அப்பணத்தினை நமது தாய்நாட்டில் வாடும் சில அநாதைகளுக்காக உபயோகப்படுத்தலாமே? இவர்களுக்கு மற்றுமொரு தூண்டுகோலும் இருக்கிறது - இவர்களுடைய உடல் இருக்கும் நிலையை உங்கள் இரத்த்தினை சோதிப்பதன் மூலம் நீங்கள் இலவசமாக அறிந்துகொள்ளலாம்.

அமீரக வலைப்பூ அன்பர்களுக்கு எனது வேண்டுகோள் - உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த முகாமில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே. உங்களுக்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு இதன் பயன்களைச்சொல்லி அவர்களையும் பங்கு பெற வைக்க வேண்டும்.

இம்மாதிரியான அடுத்த முகாம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கிறது. விருப்பம் உள்ள நண்பர்கள் தனது விருப்பத்தினை திரு. இரவிச்சந்திரன் அவரகளுக்கு உங்களுடைய தொலைபேசி எண்ணுடன் மடல் அனுப்பி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டமாகவும் அனுப்பலாம்.

நன்றி!

2006/06/08

நம்பர் படுத்தும் பாடு

நம்ம நிலவு நண்பன் அவர்கள் தனது பதிவில் அவருக்கு ஏற்பட்ட எண்கள் பற்றிய அனுபவத்தைப் நேற்று தான் படித்தேன். அவருக்கு அப்படி ஒரு அனுபவம், பாவம் என நினைத்துக்கொண்டேன். நமக்குக் கூட இந்த நம்பர்களாலே கடுப்பான அனுபவங்கள் இருக்கே என நினைத்தேன். ஆனா, அது மறுபடியும் நடக்கனுமா, அதுவும் நேத்தே?

போன வாரம் நட்ட நடு ராத்திரியிலே நம்ம இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை தன்னந்தனியா பார்த்துகிட்டு இருந்தேன். தோத்துகிட்டு வேற இருந்தாங்களா, ரொம்ப கடுப்பா இருந்தது. ஒரு பன்னிரண்டு மணி இருக்கும், யாரோ வாசல்லே மணி அடிக்கறாங்க. யாருடா அவன் இந்த நேரத்திலேனு யோசிச்சிகிட்டே போயி கதவை திறந்தா, "சார் பரோட்டா பார்சல் ஆர்டர் பண்ணீங்களே, இந்தாங்க சார்" என ஒருத்தன். எவன் அவன் இந்த நேரத்திலே பார்சல் ஆர்டர் பண்றவன்னு தெரியலே. அப்படியே செய்தாலும், அவன் வீட்டு நம்பரும் என் வீட்டு நம்பரும் ஒத்துப்போகனுமா என்ன?

இது இப்படின்னா, நேத்து ராத்திரி நல்லா தூங்கிட்டு இருந்தேன் (ஒரு வாரமா தொடர்ந்து கிரிக்கெட்டை பார்த்துகிட்டு இருந்தா?). அதே நேரம், அதே மாதிரி மணி அடிச்ச மாதிரி இருந்தது தூக்கத்திலே. கனவோ இருக்குமோனு நினைச்சேன் அரைத்தூக்கத்திலே. மறுபடியும் மணி அடிச்சது!

சரி தான் கனவு இல்லை என எழுந்து போய் கதவைத் திறந்தால், வேறு ஒரு ஓட்டலிலிருந்து பார்சல். எடுத்து வந்தவன் என்னோட தூக்கம் வழியற முகத்தைப்பார்த்து கொஞ்சம் பயந்து தான் போயிட்டான். தமிழ் ஆளு என்பதாலே, கொஞ்சம் பொறுமையா அவன் கிட்டே சொன்னேன், "இந்த நேரத்திலே யாருப்பா பார்சல் ஆர்டர் பண்ணுவா? என்னைப்பாரு, பார்சல் ஆர்டர் பண்ணவன் மாதிரியா இருக்கு" என்று. அவன் வருத்தப்ப்ட்டு சாரி சொல்லிட்டு போயிட்டான். மவனே எவன்டா அவன் இந்த நேரத்திலே பார்சல் ஆர்டர் செஞ்சு என்னை அப்பப்போ கொல்றவன்னு கண்டு பிடிக்கனும் என நினைத்துக்கொண்டே தூங்கினேன்.

இந்த மாதிரி நம்பர் மாறி வர பிரச்சினையிலே முக்கியமானது ராங் நம்பர். தொல்லைபேசி (அதாங்க தொலைபேசி) உபயோகப்படுத்தற ஒவ்வொருத்தருக்கும் ராங்கு காட்டற ராங் நம்பர் கண்டிப்பா வந்து இருக்கும். அது வர நேரம் காலம் அப்புறம் நம்ம மூடு எல்லாம் சில / பல சமயம் பொருந்தாத நேரத்திலே வந்து எல்லார் உயிரையும் எடுத்து இருக்கும். ஆனா எனக்கு வந்து இருக்கு பாருங்க அந்த மாதிரி யாருக்கும் வந்து இருக்குமானு தெரியலே. அதுவும் எனக்கு 2 தடவை தான்.

சுமார் 2 வருஷத்துக்கு முன்னாடி விடியற்காலை 4 மணிக்கு, ஒரு செல்போன் கால். என்னடா இது இந்த நேரத்திலே போயி போன் வருதே, ஏதோ முக்கியமான போனோ என நினைச்சுக்கிட்டு நம்பரை பார்த்தா, உள்ளூர் நம்பர். அதுவும் தெரியாத நம்பர். சரி எழுந்தாச்சி, எடுத்து வைப்போம்னு எடுத்த, அடுத்த பக்கம், 'அலோ' என ஒரு பெண் குரல் (அதுவும் ஒரு வயதான பெண் குரல்). அரேபிய மொழியில் அவர் என்னவோ கேட்ட பின் தான் தெரிஞ்சிது ராங் நம்பருடா மவனேன்னு.

மறுபடியும் ஒன்று அல்லது ஒன்றரை வருடம் கழிச்சி அதே மாதிரி, அதே நேரம், அதே நம்பரிடம் இருந்து அதே அரபிப்பெண். என்னனு சொல்றது? ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கனும் அந்த அம்மா போன் செய்யற நம்பருக்கும், என்னோட நம்பருக்கும்.

ஆனா, எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் - அது என்னாங்க விடியற்காலையிலே 4 மணிக்கு போன் செய்து பேசறது? ஒருவேளை என்னொட தூக்க்கத்தை கெடுக்கறதுக்காகவே இருக்குமோ?

என்னவோ போங்க!

2006/06/01

உயிரின் விலை குறைந்துவிட்டதா?

இன்று என் வாழ்விலே ஒரு மறக்க முடியாத நாள். கண்ணெதிரில் ஒரு உயிர் அனாவசியமாக பறி போனது. காரணம், அலட்சியம், ஏதும் நடக்காது என ஒரு பைத்தியக்காரத்தனமான அசட்டுத் தைரியம்.

ஷேக் சாயது சாலை இங்குள்ள ஒரு பெரும் நெடுஞசாலை. இது துபாயிலிருந்து அபுதாபிக்கு செல்ல உதவும் ஒரு மிகவும் பரபரப்பான சாலை. சுமார் 150 கி.மீ. தூரமான இச்சாலையில் பாத சாரிகள் யாரும் கடக்க அனுமதி இல்லை. வெறும் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. நடுநடுவே சிறு பாலங்கள் உள்ளன.

ஜெபல் அலி எனப்படும் துறைமுகம் இருக்கும் இடத்துக்கு வரை ஒரு 10 பாலங்கள் உள்ளன. இதுவும் வாகனங்கள் அடுத்த எதிர்பக்கத்துக்கு செல்ல மட்டுமே அன்றி, பாதசாரிகளுக்காக இல்லை. ஒருவேளை பாதசாரிகள் இச்சாலையை கடக்க வேண்டுமெனில், இப்பாலங்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும் - எந்த விபத்தும் வேண்டாமெனில்.

40 கி.மீ. தூரத்திற்கு ஒரு 10 பாலங்கள் என்றால், சராசரியாக 4 கி.மீ. க்கு ஒரு பாலம். எனவே, நீங்கள் நடுவில் இருந்தீர்கள் எனில், இவ்வளவு தூரம் நடந்து பாலத்தை அடைந்து பின்பு மறுபுறம் செல்ல குறைந்தது 30 நிமிடம் ஆகும் (அதுவும் கோடைக்காலங்களில் இந்த 30 நிமிடம்? சொல்லவே வேண்டாம்) .

இச்சாலை முழுவதும் ஏதாவது சாலை செப்பனிடும் பணியோ, அல்லது கட்டிடங்கள் கட்டும் பணியோ நடந்து கொண்டோ இருந்துகொண்டே இருக்கும். இப்பணியில் ஈடுபடும் எண்ணற்ற தொழிலாளர்கள் சாலையினை கடந்து கொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனையோ பேர்கள் உயிர்விட்டார்கள் என பத்திரிக்கைகளில் படிப்பது உண்டு. ஆனால், இந்த மாதிரி ஒரு சம்பவம் என் கண்ணெதிரில் நடக்கும் என நான் கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை.

இன்று காலை நான் அலுவலகத்திற்கு வழக்கம் போல எனது காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது 2 பேர் நட்டநடு சாலையில், இரண்டு வரிசை (Lane) நடுவே வாகனங்கள் சென்று விடுவதற்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்த்தேன்.

ஒவ்வொரு வரிசையாக இம்மாதிரியே முன்னேறி அவர்கள் 3ஆவது பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் இடைப்பட்ட வெள்ளைக்கோடுகளில் நின்று கொண்டிருந்தனர் இருவரும். தங்களைப்பார்த்துக் கொண்டே (திட்டிக்கொண்டே) செல்லும் கார்களைப்பார்த்து தனக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டும் இருந்தனர் அவர்கள். அவர்கள் இருப்பதைப் பார்த்து விட்ட எனக்கு முன் சென்ற காரும், பக்கத்து வரிசையில் வந்த காரும் மெதுவாக்கி விட்டோம்.

ஆனால்? கண்ணிமைக்கும் நேரத்தில், மூன்றாவது வரிசையில் இருந்து வந்தது ஒரு கார். அது, என் பக்கத்து வரிசையில் இருந்த காரையும் என்னுடைய காரையும் முந்திச் செல்ல (overtake) செய்ய முற்பட்டது. இதனால், அக்கார் ஓட்டுநருக்கு நடுச்சாலையில் நின்று கொண்டிருந்த இருவரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

120 கி.மீ. வேக வரையரை உள்ள அச்சாலையில், 140 கி.மீ வேகம் வரைதான் நிறைய பேர் செல்வார்கள். அப்படித்தான் இக்காரும் வந்தது - தப்பென்ற சத்தத்துடன் இவ்விருவரையும் தூக்கி அடித்தது! என் கண் முன்னால், ஒரு உடம்பு காற்றில் 6 அடி உயரத்தில் பறந்தது! எனக்கு ஒன்றும் புரியவில்லை - ஆனால், அவ்விபத்தினை தவிர்க்க தன்னிச்சையாக என் கை காரை பக்கத்து வரிசைக்குத் திருப்பியது. என் அதிர்ஷ்டம் - பக்கத்து வரிசையில் யாரும் வரவில்லை.

இக்களேபரத்திலிருந்து எப்படித்தான் தப்பித்தேனோ எனக்கே தெரியவில்லை. கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடைய கார் மீது இரத்தத்துளிகள் நடந்த விபத்தின் கோரத்தையும் மயிரிழையில் நான் தப்பியதையும் நினைவு படுத்தின!

உயிரின் மதிப்பு என்ன அவ்வளவு குறைந்து விட்டதா? இறந்து போன அவரை நம்பி அவரது வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ? என்னென்ன கனவுகளுடன் அவரது மனைவி/பிள்ளைகள்/பெற்றோர் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? எவ்வளவு கடன் பட்டிருக்கிறாரோ இங்கு வந்து வேலையில் சேர? இனி அவர் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு?

இம்மாதிரி விபத்துக்கள் நடக்கக் காரணம் என்ன? பொதுவாக இவர்களுக்கு ஒரு அலட்சியமா அல்லது இவர்களை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகளா? இவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் சாலையின் ஒரு பக்கமே தான் வரும் அல்லது இறக்கிவிடும். இவர்களாக மற்றொரு பக்கத்திற்கு சாலையைக் கடந்து செல்ல முற்படும்போது இவ்வாறு நடப்பதாக சொல்கிறார்கள். இன்று நடந்தது இவர்கள் மறுபக்கத்திலிருந்த டீகடைக்கு செல்ல முற்பட்டிருப்பார்கள் - என நான் நினைக்கிறேன்.

அரசாங்கம் இவ்வாறு நடப்பதை தவிர்க்க 150 கி.மீ. தூரத்திற்கும் சாலை நடுவில் கம்பிச்சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறது (இன்றைய விபத்துப் பகுதியில் இன்னும் கட்டப்படவில்லை). அப்படியே கம்பிச்சுவர் கட்டினாலும், அதைத் தாண்டிக்குதித்து போக இவர்கள் முற்படமாட்டார்கள் என்பதும் நிச்சயமில்லை!

ஒரு அதிவேக சாலையில் கடக்க முற்பட்டால் என்னவாகும் என ஒரு பகுத்தறிவு கூட இல்லாமல், இப்படி ஒரு விலைமதிப்பற்ற உயிர் வீணாக போனது என் மனத்தை மிகவும் பாதித்திருக்கிறது. இதில் மீண்டு வர எத்தனை நாள் ஆகும் என தெரியவில்லை!

இறந்து போன அந்நபரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றுமில்லை.