2006/07/26

சொர்க்க வாசம் முடிந்தது!

சென்னைக்கு விடுமுறைக்குப் போவதாக சொல்லிவிட்டுத் தான் போனேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மொத்தமாக எனது மிகப்பெரிய நன்றி.

ஊருக்குப் போனானே, என்ன ஆனான் என ஒருத்தருக்குமே அக்கறை இல்லை. (வலைப்பூக்களில் இதெல்லாம் சகஜமப்பா என யாருப்பா அங்கே குரலு விடறது? மனசாட்சியா, சரி சரி!).

ஊருக்குப் போனது நமது 'இந்தியன்' விமானத்தில் தான். விமானம் நிறைய பேருடைய பயமுறுத்தல்களையும் மீறி, வெறும் 30 நிமிட தாமதத்திலேயே கிளம்பி விட்டது. ஏறும் போதும் இறங்கும் போதும், ஆட்டம் மிகவும் பலமாகவே இருந்தது (சிறிய A-320 விமானம் என்பதால்).

இன்னொரு முக்கியமான முன்னேற்றம் - விமானப்பணிபெண்கள். வழக்கமாக ஓய்வு பெறும் வயதில் இருக்கும் பணிப்பெண்களையே பார்க்கவேண்டி இருக்கும் இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் (ஜொள்ளுப்பாண்டி கவனத்திற்கு!).

சென்னையில் - சொர்க்கம் என நான் சொன்னாலும், அங்கே இருப்பவர்களுக்கு அது அப்படி தெரியவில்லை என்றே தோன்றுகிறது. எல்லாரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் நேரமே இல்லை. முதலெல்லாம் 5 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது, இப்போது நிறைய பேர் 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.

ஊர் முழுவதும் கார்கள் அதிகமாகி இருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பை விட நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் (காரணம் என்ன? தெரியவில்லை).

ஆட்டோ ஓட்டுநர்களிடம் மீட்டர் என்ற வார்த்தையைப்பற்றி கேட்க முடியாது - அவர்களும் மறந்து விட்டார்கள், மக்களும் கேட்பதில்லை. ஷேர் ஆட்டோ நன்றாக ஓடுகிறது (வசதியாகவும் இருக்கிறது). யாரைப்பார்த்தாலும் பெட்ரோல் விலையைப்பற்றித் தான் பெருமூச்சு விடுகிறார்கள் (ஆனாலும் வாகனங்கள் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை).

நிலம், வீடு, மனை - எதுவும் வாங்குவதாக இருந்தால் இப்போதே வாங்க வேண்டும். எல்லாம் டைனோசார் விலை போல இருக்கிறது (எத்தனை நாள் தான் யானை/குதிரை என சொல்லுவது?). காரணங்கள் பல சொல்கிறார்கள் - எது உண்மையென தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் - இங்கே இருக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க விடுமுறையில் போனால், ஜூன் / ஜூலை மாதத்தில் சென்னையும் 36 - 39° அடித்து கொளுத்தியது. என்னுடைய ராசி, நான் இங்கு வந்ததும் அங்கே நல்ல மழையாம்! நேரமப்பா நேரம்!

வலைப்பூக்களில் இந்த விடுமுறையின் போது என்ன என்ன நடந்தது என இன்னும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. மெதுவாகத் தான் படிக்க வேண்டும். காரணம், சென்னை இணையதள கணினிகளின் நிலைமை. அதில் தமிழ்மணத்தையும், தேன்கூட்டையும் பார்க்க முயன்று நொந்து போய் வந்துவிட்டேன். இணையதள மையங்களில் சிலர் அடையாள அட்டை கேட்கிறார்கள், பலர் கேட்பதில்லை. எப்படி இருந்தாலும், கணினிகளின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

பொதுவாக சென்னையில் பல மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகிறது - அதுவும் ஒரே வருட இடைவெளியில். சில நல்ல மாறுதல்கள், சில மற்றபடி. என்ன இருந்தாலும், சென்னை சென்னை தான்!


மீண்டும் வலைப்பூவில் வந்து இணைந்த மகிழ்வுடன்,
துபாய்வாசி