2006/02/10

கடியின் வலி

எல்லோரும் இப்போது "கடிக்கும்" வேலையை செவ்வனே செய்து
வருக்கிறார்கள். அதைப் பார்த்து எனக்கு வந்த மலரும் நினைவுகள்....

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். அனைவரும்
கல்விச்சுற்றுலா சென்றிருந்தோம். நாங்கள் படித்தது விலங்கியல்
என்பதால் அது உண்மையான கல்விச்சுற்றுலாவாகத் தான் இருந்தது.

ஒரு 8 நாள் பயணத்தினை முடித்துக்கொண்டு அனைவரும் West-Coast
விரைவு வண்டியில் திரும்ப வந்துகொண்டிருந்தோம். எனது நண்பனுக்கு
(மற்ற அனைவரைப்போலவே) மிகவும் போரடித்தது. வண்டி ஒவ்வொரு
நிலையத்திலும் நின்று நின்று வந்துகொண்டிருந்தது. அவன் என்னை
நோக்கி 'வண்டி அடுத்தது எங்கேடா நிற்கும்' எனக்கேட்டான் (என்னவோ
எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல).

எனக்கு இருந்த கடுப்பில், என்னால் தாங்க முடியவில்லை. அவனிடம்
சொன்னேன், 'டேய், கவலைப்படாதே, கண்டிப்பாக எப்படி இருந்தாலும்,
தண்டவாளத்தில் தான் நிற்கும்' என ரொம்ப அப்பாவி மாதிரி
சொன்னேன். அவன், என்னை ஒரு பார்வை பார்த்தான்.

அவ்வளவு தான், என்னை சரியாக உதைக்கப்போகிறான் என
நினைத்தேன். அவன் ஓன்றுமே சொல்லாமல் பக்கத்து compartment
சென்று விட்டான். சிறிது நேரத்தில் எனது வகுப்பின் 'தாதா'வான ஒரு
பையனுடன் வந்தான். தாதா வந்து 'எவன்டா அவன், வண்டி
தண்டவாளத்தில் நிற்கும் என கடிப்பது? மவனே இன்னொரு தடவை
இப்படி கடிச்சே, அவ்வளவு தான். வண்டியிலிருந்து தூக்கி வீசிவிடுவேன்'
என பயமுறுத்தினான்.

அப்போது தான் எனக்கு தெரிந்தது, என் நண்பன் எனது கடியினால்
எவ்வளவு வலி பட்டிருந்தான் என. எனக்கு சிரித்து சிரித்து கண்ணில்
தண்ணீரே வந்து விட்டது.

எனது மிகச்சிறந்த 'கடி' இதுவே என (இதுவரை) பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home