2006/05/01

வெளிநாட்டில் வேலையா? - சில தெரியாத / புரியாத விஷயங்கள்

சில நாட்களுக்கு முன் சந்தித்த சில புது துபாய்வாசிகளைப் பற்றிய பதிவு இது.

மேலும், வேற்று நாட்டில் வேலை தேடும் எத்தனையோ நண்பர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிடவும் இந்தப்பதிவை உபயோகித்துக் கொள்கிறேன்.

போன வாரம் புதிதாக இங்கு வேலைக்குச் சேர்ந்த சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்னிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசினார்கள் (அல்லது பேச வைத்தேன்).

இவர்கள் வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் அனைவருக்கும் காபி, டீ அளித்து கவனித்துக்கொள்ளும் வேலை. ஏறக்குறைய உணவு பரிமாறும் சிப்பந்தி (சர்வர்/பட்லர்) வேலை போல. சிலர் சுத்தம் செய்பவர்கள் (cleaners).

இவர்கள் அனைவரும் ஒரு பிரதிநிதி (ஏஜென்ட்) மூலமாக இங்கு வந்தவர்கள். ஒவ்வொருவரும், ரூ. 60,000 முதல் 1 லட்சம் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் சொல்லப்பட்ட வேலை - ஒரு ஓட்டலில். ஆனால், அவர்கள் ஒரு ஒப்பந்தக்கார நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் மேற்பார்வையாளராக பணி செய்து கொண்டிருந்தாராம். சுமார் 10,000 வரை சம்பாத்தித்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கிட்டத்தட்ட அதே அளவு சம்பள வேலைக்கு இங்கு வந்திருக்கிறார் - உணவு பரிமாறும் சிப்பந்தி வேலை பார்க்க. அவரிடம் சொல்லப்பட்டது ஓட்டலில் மேற்பார்வையாளர் வேலை! ஆனால்?

அவர் ஒரு பட்டம் மற்றும் உணவு வழங்குவதில் உள்ள படிப்பு (Catering Tech. Diploma) படித்தவர். அதனால் அவருக்கு அளிக்கப்பட்டது 700 தி. சம்பளம். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு உடனே இங்கு வந்து விட்டதாக சொன்னார்.

அவரிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இங்கு இந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு வந்தீர்கள் என்பதே. 'தெரியாமல் வந்து விட்டேன்' என்ற வழக்கமான பதிலே கிடைத்தது.

மற்றுமொருவர், சவூதி அரேபியாவில் 10 வருடம் அனுபவம் உள்ளவர். அவர் அங்கு காசாளராக வேலை பார்த்ததாக சொன்னார். அரேபிய மொழியை நன்றாக பேசுகிறார். அவருக்கு சம்பளம் 500 தி. மட்டுமே. அவர் கொடுத்த பணம் 70,000 ரூ.

இவரிடம் கேட்டதற்கு, பணம் கொடுத்து வேலைக்கு ஒத்துக்கொள்வதானால் ஒத்துக்கொள், இல்லாவிட்டால், உன் பின்னால் தயாராக இருக்கும் ஆளுக்கு கொடுத்து விடுவோம் என சொன்னார்கள், அதனால் ஒத்துக்கொண்டு விட்டேன் என்றார்.

மற்றுமொருவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக (salesman) பணிபுரிந்து வந்தாராம். அவர் இங்கே செய்வது சுத்தம் செய்யும் வேலை. சம்பளம் 350 தி. கண்டிப்பாக சென்னையில் இதை விட நிறைய சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பார். அவரும் ரூ. 80,000 கொடுத்து தான் வந்திருக்கிறார். கேட்டதற்கு, இங்கு ஏற்கனவே இருக்கும் அவரது அண்ணன் சொல்லித்தான் வந்தாராம். இது பரவாயில்லையா என்றதற்கு, 'வேறு என்ன செய்வது' என்பதே பதிலாக கிடைத்தது.

இவர்களுடன் வந்த அனைவருமே இப்படித் தான் ஒரு தொகையினைக் கொடுத்து இங்கு வந்திருக்கின்றார்கள். ஒன்று செய்த நல்ல வேலையை விட்டுவிட்டு அல்லது இங்கு அந்த வேலையினை விட நல்ல வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இப்படி அடிக்கடி இங்கே நடப்பதை பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?

முதலாவது முக்கியக்காரணமாக நான் எண்ணுவது இதற்கு முன் இங்கு வரும் இப்படிப்பட்ட ஆட்கள்.

இவர்கள் வந்தவுடன் உண்மையான நிலையைக்கண்டு குமுறுவார்கள் (நமது மேற்கண்ட புது நண்பர்களைப்போல). சில வருடங்களுக்குப் பிறகு பழகிவிடும், ஊருக்கு விடுமுறைக்கு செல்வார்கள். எப்படி தெரியுமா? பகட்டான குளிர் கண்ணாடியும், புத்தம்புதிய கைத்தொலைபேசியும், வாசனை திரவியங்களுமாக. (நமது வெற்றிக் கொடி கட்டு வடிவேலு ஞாபகம் வருகிறதா?). தனது வீட்டு மக்களிடமும், நண்பர்களிடமும், தான் பட்ட அவதிகளையும் தான் செய்து வரும் உண்மையான வேலையையும் மறைத்து விடுவார்கள்.

வீட்டு மக்களிடம் மறைப்பது ஒரு நல்ல எண்ணதினால் தான் என்றாலும், மற்றவர்களிடம் மறைக்கப்படும் போது, அவர்களுக்கும் தானும் வெளிநாட்டில் வேலை பார்த்து இதே மாதிரி 'பந்தா' காட்டலாம், வசதியாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. சில பேர் இங்கு இருக்கும் உண்மை நிலையை அங்கு சொல்ல முற்பட்டாலும், அதை நம்பத் தான் ஆளில்லை. ஏனெனில் பெரும்பான்மை தானே எப்போதும் ஜெயிக்க முடிகிறது?

அப்படிப்பட்ட பந்தாவிற்கும், ஓரளவு வசதியான வாழ்விற்கும் அவர்கள் கொடுக்கும் உண்மையான விலை தான் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகிறது. குழந்தையின் மழலைப் பேச்சு, மனைவியின் அன்பு, பெற்றோருடைய பாசம், நண்பர்களுடன் உற்சாகம் - இவை அனைத்தையும் இழந்து தவித்து அவர்கள் சம்பாதிப்பது - அந்த ஓரிரு மாதம் விடுமுறையும், அதன் சந்தோஷமும் தான்.

அந்தப் போலியான சந்தோஷத்தை உண்மை என நினைத்து, தானும் அப்படி வெளிநாடு போக வேண்டும் என ஆசையில் இருக்கும் நண்பர்கள் தான் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள். பத்திரிக்கைகளில் இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் கதைகளை நிறைய படிக்கிறோம். சேரன் தனது 'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் ஒரு புதிய வழியையும் சொல்லியிருந்தார். ஆனாலும்?

இந்த நிலை முக்கியமாக கீழ்தட்ட வேலை செய்பவர்களுக்கே ஏற்படுகிறது. மற்றவர்கள் அவ்வளவாக ஏமாற்றப்படுவதில்லை அல்லது ஏமாறுவதில்லை.

இவைகள் நிகழாமல் தடுக்க முடியும். மேற்கண்ட நான் சொன்ன ஆட்கள், நிறைய துணை பிரதிநிதிகளிடம் சிக்கியுள்ளனர். இவர்களை வேலையில் அமர்த்தி இங்கு அனுப்பும் அனுமதியைப் பெற்றது மும்பையில் இருக்கும் ஒரு வேலையளிக்கும் நிறுவனம். இவர்களிடம் நேரடியாக சென்றவர்கள் அளிக்க வேண்டிய 'சேவை'க் கட்டணம் வெறும் 30 அல்லது 40,000 மட்டுமே. இந்த துணை பிரதிநிதிகள் கடலூர், கோவை மற்றும் சென்னையில் இருந்து கொண்டு, மேற்கொண்டு பணம் வாங்கிக்கொண்டு, இவர்களை மும்பைக்கும் அனுப்புகிறார்கள். கடலூர் போன்ற இடங்களில், மேற்படி தொகை அதிகமாகவும், சென்னையில் குறைவாகவும் இருக்கிறது.

வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்கள் நேரடியாக வேலைக்கும் பணியமர்த்தும் பிரதான நிறுவனத்தை அணுகினால் துணை பிரதிநிதிகளுக்கு அளிக்கும் 'அதிக' கட்டணத்தை தவிர்க்கலாம்.

இரண்டாவது, அப்படி உரிமை பெற்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மையை வெளியுறவுத்துறையிடம் உறுதி செய்துகொள்ளலாம். இவர்களுக்கு உரிமம் எண் உள்ளதா, அப்படி இருக்கிறது என்றால் அது சரியானது தானா போன்ற தகவல்கள்.

மேலும், சொல்லப்படும் வேலை மற்றும் சம்பளம் என்ன என்பதை எழுத்து மூலம் வாங்கிக்கொள்வது மிகவும் நல்லது. இவையெல்லாம், இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளே. ஆனால், நடைமுறைப் படுத்துவது வேலை தேடும் நபர்களிடம் தான் உள்ளது. குடியேற்ற துறை இவைகளை கட்டாயமாக்கப்போவதாக எங்கோ படித்தேன்.

என்ன தான் அரசாங்கம் கட்டாயமாக்கினாலும், இங்கு வரத் துடிக்கும் எத்தனையோ பேர் இருக்கும் வரை இந்த மாதிரி கதைகள் கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும் என தோன்றுகிறது.

5 Comments:

At 3:50 PM, May 01, 2006, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

அருமையான பதிவு துபாய்வாசி..

நானும் இதுபற்றியான பதிவுகளை எழுதிவைத்திருக்கின்றேன். இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடலாம் என்று முயல்கின்றேன்.

தங்களது இந்தப்பதிவையும் தங்களது பெயரைப் பயன்படுத்தி உபயோகித்துக்கொள்ளலாமா..

 
At 4:01 PM, May 01, 2006, Blogger Unknown said...

நன்றி நண்பா.

உபயோகப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. இதெற்கெல்லாம் அனுமதி கேட்கலாமா? தாராளமாக. மிக்க சந்தோஷம் அடைவேன்.

 
At 4:37 PM, May 01, 2006, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

நிறைய பயனுள்ள விஷயங்களைத் தன்ந்தமைக்கு நன்றி.

வெகு நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்தில் சமுக அக்கறையுடனும், கூடவே எனக்கும் பாயனுள்ள தகவலைத் தருவாதாகவுன் வந்த ஒரு பதிவைக் காண்கிறேன்.

இன்னும் நாலைந்து மாதத்திற்குப் பிறகு துபாய்குச் வேலை தேடிச் செல்லலாம என்ற யோசனையில் உள்ளேன்.

ஒரு சொந்தப் பிரச்சினை:
துபாயில் உள்ள என் சித்தப்பா, விசா free அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். Free விசாவில் வந்து வேலைதேடுவதிலும் இடர்பாடுகள் உள்ளதா? நேரம் கிடைக்குமெனில் மட்டும் பதில் போடவும். தங்கள் பொன்னான நேரத்தை எனக்காக விரயமாக்க விரும்பவில்லை.

நட்புடன்,

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்

 
At 11:33 AM, May 02, 2006, Blogger Unknown said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி ரியாத் நண்பரே!

தங்கள் கேள்விக்கு விடையளிப்பது எப்படி? தங்களை தொடர்பு எப்படி கொள்வது என்பது தெரியவில்லை. எனவே இங்கேயே அதற்கு பதிலளிக்க முயலுகிறேன்.

நீங்கள் வருவது 'வருகை' விசாவாகத்தான் இருக்கும். அப்படி வருவது தான் மிகச்சிறந்தது. நிறைய பேர்கள் அப்படி வருகை விசாவில் வந்து வேலை தேடி, கிடைத்தபின் அதை வேலை பார்க்கும் விசாவாக மாற்றிக்கொள்கிறார்கள். அதற்கு செய்யவேண்டியது, நீங்கள் வருகை விசாவை ரத்து செய்வது தான். அதற்கு ஒரு முறை நாட்டை விட்டு வெளியே சென்று விட்டு, புது வேலை விசாவுடன் திரும்ப நுழையவேண்டியது தான். இதற்கெனவே சில குறைந்த கட்டண விமானங்கள் உள்ளன.

மேலும் ஏதும் தகவல் வேண்டுமெனில், தொடர்பு கொள்ளுங்கள். நன்றி!

 
At 2:25 PM, May 02, 2006, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< Home