எனக்குப் புரியவில்லை!
சென்ற முறை நான் சென்னை சென்றிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி, என் மனதை மிகவும் வருந்தச் செய்தது.
சமீப காலங்களில், சென்னை செல்லும்போதெல்லாம் பேருந்துப்பயணம் மிகவும் சில தான். காரணம் போக வேண்டிய தூரம் அவ்வளவு இல்லை அல்லது போய் வருவதற்கு ஒரு வாகனம் இருந்தது. இந்தத் தடவை வாகனம் இல்லாத காரணத்தால், மற்றும் போரூர் வரை போக வேண்டியிருந்ததாலும், பேருந்தே சரியென்று போயிருந்தேன்.
சென்னை கூட்டம் எனக்கு ஒன்றும் புதியதல்ல. பள்ளிக்கும், கல்லூரிக்கும் - ஏன் வேலைக்கும் கூட பேருந்து ஒன்றே உபயோகித்து வந்தவன் நான். கூட்டம் பழகியது தான் என்றாலும், சமீப காலமாக அது அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது என எல்லாருக்கும் தெரியும். எனக்கும் அது தெரிந்தே இருந்தது.
குறிப்பாக போரூரின் வழித்தடம் மிகக் கூட்டமான ஒன்று என்று நினைக்கிறேன். வரும்போதும் போகும்போதும் கூட்டத்திற்கு ஒரு வித்தியாசமுமில்லை. இத்தனைக்கும் நேரம் காலை 10 மணிதான். கூட்டமில்லா பேருந்திற்காக காத்திருப்பதாக இருந்தால், அன்றே வீடு போய் சேரமுடியாது என்பதால், வந்த ஒரு பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு எறினேன்.
நமது சென்னையில், கடைசி வரிசை மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் நான் ஏறிய போது, அதில் ஆண்கள் தான் உட்கார்ந்திருந்தனர். அதில் குறிப்பிடத்தக்க இருவர் - வயது 25 கூட இருக்காது. ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் போலத் தோற்றமளித்தனர். இந்தக்காலத்து 'வயசுப் பசங்க' என நாம் நினைக்கும் எல்லாத் தகுதிகளும் அவர்களுக்கு இருந்தது. அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் ஒரு குழந்தையுடனும், ஒருவர் வயதானவராகவும் இருந்தனர். எனக்கு இடம் கிடைக்கவில்லை.
பேருந்து விருகம்பாக்கம் வந்தடைந்தது. நிறைய பெண்மணிகள் ஏறினர். அவர்களுக்கே உரிய பழக்கமான ஏறிய பின் முன்னே செல்லாமல், பின் வரிசையை நோக்கி வந்தனர். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களில் எவரும் எழுந்து இடமளிப்பதாகத் தெரியவில்லை.
புதிதாக ஏறிய அம்மணி ஒருவர், மெதுவாக புலம்ப ஆரம்பித்தார். 'இவனுங்க எல்லாம் இடம் கேட்டாக்கூட கொடுக்க மாட்டானுங்க' என்று. அதைக் கேட்ட அந்தப் பெரியவர், எழுந்து இடத்தை அளித்தார். அவர் எழுந்திருக்கவே, அவரது பக்கத்தில் இருந்த மற்றொருவரும் எழுந்திருக்க வேண்டியதாகியது.
அடுத்த நிறுத்தம் வந்தது. இன்னும் பல பெண்கள் ஏறினர். இப்போது ஏறிய பெண்களில் ஒரு குடும்பம் அடக்கம். வயதான ஒரு பெண் மற்றும் கைக்குழந்தையுடன் ஒரு பெண் என இருந்த அவர்கள் உட்கார இடமளிக்குமாறு கேட்டனர். நமது வாலிபர்கள், எழுந்திருக்கவில்லை - மற்றவர்கள் எழுந்திருந்தனர். அதனால் காலியான இடத்தில், இருவரும் நகர்ந்து கொண்டு (பேருந்தின் வலது ஓர ஜன்னல் பக்கம்) வசதியாக அமர்ந்து கொண்டனர்.
குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தவரும் எழுந்திருக்க பார்த்தார், ஆனால் அவரை உட்கார சொல்லிவிட்டு பெண்கள் அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டனர். குழந்தையை வைத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அந்த வயதான பெண்மணிக்கு இடம் கிடைக்கவில்லை.
அடுத்த நிறுத்தமும் வந்தது - இன்னும் கூட்டமும் கூடத்தான். கூட்டத்தில் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. பேருந்து ஆடும் ஆட்டத்திலும் அது இருந்த நிலையுலும் - சொல்லவே வேண்டாம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த வயதான அம்மா, வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார். அந்தப் பையன்களோ எதுவுமே கேட்காதது போல தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் அனைவரும் சேர்ந்து சத்தமே போட ஆரம்பித்து விட்டனர். இவர்களோ அசருவதாக இல்லை.
நடத்துனரும் தன் பங்குக்கு தனது இருக்கையிலிருந்து குரல் கொடுத்தார். ஒன்றும் உபயோகமில்லை. வடபழனி நிறுத்தம் வந்தவுடன், அந்த இருவரில் ஒருவன் மட்டும் எழுந்தான். அந்த வயதான அம்மா அமர்ந்துகொண்டார். இன்னொருவனோ, ஒன்றுமே நடக்காதது போல அப்படியே இருந்தான்.
வடபழனி கமலா தியேட்டர் வந்தவுடன் தான் அவன் எழுந்தான் - ஏன் தெரியுமா? அடுத்த சிக்னலில் இறங்கிக் கொள்ள. இல்லையெனில்?
முன்பெல்லாம், நான் சென்னையில் பேருந்துகளில் பயணித்த போதெல்லாம், பெண்கள் வந்தால் தானாகவே ஏறக்குறைய அனைவரும் (சில சமயம் ஆண்கள் இருக்கையாக இருப்பினும் கூட) எழுந்து இடமளித்தனர். இப்போதெல்லாம் அந்த மாதிரி எதிர்பார்க்கக் கூடாதோ?
அந்த வாலிபர்கள் இருவரும் பயணிக்க வேண்டிய தூரம் மிகக் குறைவே. 4 நிறுத்தங்கள் தான். அந்தத் தூரத்திற்கு அவர்களால் நின்று பயணிக்க முடியவில்லை. ஒருவேளை அவர்கள் இரவுப்பணி செய்துவிட்டு வருபவர்களாக இருந்தால் கூட, பெண்கள் (அதுவும் குழந்தையுடன் / வயதான பெண் வேறு) கெஞ்சிக்கேட்ட பின்னும் அவர்கள் எழுந்திருக்காதது மிகவும் வருத்தப்பட வைத்தது.
இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இந்த 'வயசுப்பசங்க' கொடுப்பதில்லை என்பது தான் எனக்குத் தோன்றிய ஒன்று. இதற்கு யார் காரணம்? பெண்களும் ஒரு காரணமா என எனக்குப் புரியவில்லை. சென்னையில் இருந்து வந்து 7 வருடமாகி விட்டபடியால், இதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை.
என்னுடைய பெண் உறவினர் ஒருவரிடம் இந்த நிகழ்வைச் சொல்லியபோது, இப்போதெல்லாம் இப்படித்தான் என வெகு சாதாரணமாக சொன்னார். அவர்களுக்கெல்லாம் பழகி விட்டது. எனக்குத் தான் இது மிக புதிது!
இதற்கெல்லாம் யார் காரணம்? அனைவரும் 'வெறும்' சுயநலவாதிகளாக மாறி விட்டனரா? அல்லது இந்த 'எதிர்கால' சந்ததி தான் இப்படி அடிப்படை குணங்கள் இல்லாமல் மாறிக்கொண்டிருக்கிறதா?
எனக்குப் புரியவில்லை!
6 Comments:
If you asked that boys they used to say when women are asking equality with men this also can be tolerated by them. I have experienced them and the boys usesd to say those words to all women including aged ladies. This is in Chennai only. Not in Southern districts.
நீங்கள் சொல்லுவது சரிதான் கீதா. நானும் அப்படி சில பேர் (என் நண்பர்கள் உட்பட) சொல்லுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் மிகக்குறைவான அளவே இருந்தது. இப்போதோ? ஏனிப்படி?
ஹீம்.... பெண் சுதந்திரம்ன்ற பெயர்ல அவர்கள் எடுத்து போதும், பொருத்தது போதும் பொங்கி எழுனு ஆண் வர்கத்தினர் எழுந்துட்டாங்களா..
யாத்ரீகன்
என்ன சொல்லவரீங்கன்னு புரியலே.
இதை மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியென நினைத்துக்கொள்ளுங்கள்.
என்ன மகளிர் தின ஸ்பெஷலா?
மனசு,
உண்மையில், மகளிர் தினம் மறுநாள் என்று தெரியாமலே எழுதியது.
இதெல்லாம் தானா வருதுப்பா, என்ன செய்ய? ;)
Post a Comment
<< Home