துபாயில் பனி
என்ன நம்ப முடியவில்லையா? உண்மை. ஆனால், இயற்கையான பனியல்ல. செயற்கையான பனி.
துபாயில் சுற்றுலாப்பயணிகளை வரவைக்க நடக்கும் எத்தனையோ முயற்சிகளில் இதுவும் ஒன்று. சுற்றுலா இப்போது இவர்களுக்கு நிறைய வருமானத்தினை அளிக்க ஆரம்பித்து விட்டதால், இவர்களும் பணத்தினை தண்ணீராய் (அல்லது பனியாய்?) செலவழித்து உருவாக்கியிருப்பது தான் இந்தப் பனிச்சறுக்கு விளையாட்டு இடம்.
இது நகர மையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நாட்டின் மிகப்பெரிய ஷாப்பிங் நிலையம் (Mall of the Emirates) கட்டப்பட்ட போது அதை ஒட்டி இதுவும் கட்டப்பட்டது.
இது தான் உலகத்திலேயே மிகப்பெரிய உள்ளரங்குப் பனிச் சறுக்கு மையமாகும். இதன் பரப்பளவு சுமார் 3 கால்பந்தாட்டக் களங்களுக்கு இணையாகும். சுமார் 25 மாடி உயர அளவுக்கு இருக்கும் இது, ஒரு சாய்வான உலோக குழாய் உள்ளே கட்டப்பட்டு இருக்கிறது.
இதன் உள்ளே சென்று பனிச்சறுக்கு விளையாட, நல்ல அனுபவமுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் பரிசோதனை செய்த பிறகே. தெரியாத ஆட்களுக்கு (என்னைப் போன்ற) விளையாட நிறைய இருக்கிறது.
இதன் அனுமதிக்கட்டணம் 100 திர்ராம் (சுமார் 1200 ரூ அல்லது 35 $). குளிரை சமாளிக்கத் தேவையான எல்லா உடைகளும் இதில் அடங்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நிறைய சறுக்குப் பாதைகள் எல்லாம் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பனிச் சறுக்கு மையத்தில் ஆண்டு முழுவதும் பனி இருக்கும். இதை அவர்கள் உறை நிலையில் வெப்பதினை குளிர் சாதனங்களின் உதவியால் கட்டுப்படுத்தி, அதிக அழுத்தத்தில் தண்ணீரைப் பீய்ச்சி, பனியை உறுவாக்குகிறார்கள். பனி உருகுவதால் வரும் தண்ணீரை, செடி மற்றும் புல்வெளிக்கு பாசனத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஏற்படும் குளிர் காற்றும் பக்கத்திலுள்ள ஷாப்பிங் நிலையத்தினை குளிர்விக்க பயன்படுகிறது.
இங்கு சென்று வெளியிலிருந்து ஒரு முறை பார்த்திருக்கிறேன். அந்த இடத்தின் மிகப்பெரிய கவர்ச்சியே இதுதான். செய்தித்தாளில் இதன் பாதுகாப்பு அம்சங்களின் ஓட்டை பற்றி சில செய்திகள் வந்தாலும் கூட்டத்திற்கு குறைவில்லை. (வெளிப்புற கண்ணாடியில் பெரிய விரிசலை நானும் பார்த்தேன்).
துபாயில் நடக்கும் டென்னிஸ் போட்டிக்கு வந்து இருக்கும் ஷெரபோவா, டேவன்போர்ட் ஆகியோரை இவர்கள் அங்கு வரவழைத்து விளம்பரம் வேறு தேடிக்கொண்டு இருக்கின்றனர். விளம்பரம் இல்லாமலேயே இது நன்றாக பிரபலாமாக வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
(சானியா ரசிகர்களுக்கு - அவர் இன்னும் துபாய் வந்து சேரவில்லை. பெங்களூர் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் விளையாடியதால்).
யாராவது வருகிறீர்களா, பாலைவனத்தின் நடுவே பனி பார்க்க?
4 Comments:
Enjoy !
:-)
=======================
You are tagged !
more details here, in my blog.
நெஞ்சைத் தொட்டுட்டீங்க ஞான்ஸ்!
மிக்க நன்றி.
துபாய்வாசி... உங்க கட்டுரைகள் எல்லாம் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் தானே.. இந்த ஷார்ஜாப் போட்டிகளுக்கு என்னாச்சு? ஒரு பதிவு போடுங்களேன்
நன்றி தேவ்.
உங்கள் பாராட்டு எனக்கு ஒரு தெம்பைத் தருகின்றது.
ஷார்ஜா - விவரம் சேகரித்து எழுத முயற்சிக்கிறேன்.
Post a Comment
<< Home