எங்கே போகிறோம்?
நான் துபாய் வந்து 7 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. வந்த புதிதில் எதுவுமே பிடிக்காமல் தான் இருந்தது, வழக்கமான 'மேல்நாட்டு வாழ் இந்தியர்கள் போல'.
அங்கே இருந்த போது தெரியாத பலரின் அருமை பெருமைகள் இங்கே வந்தபின் தெரிய ஆரம்பித்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
அதனால் எல்லோருக்கும் கடிதம் எழுத ஆரம்பித்தேன். தனியாக இருக்கும் போது பொழுதை கழிக்க இதைத்தவிர நல்ல வேலை இருக்க முடியுமா? 10 கடிதம் போட்டால், பதில் வருவது ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் (வீட்டுக்காரம்மா இதுலே அடக்கம் இல்லே). அந்த ஒன்றுக்கு பதில் போட்டால், அதுவும் திரும்ப வருவது மிகவும் அரிது (இல்லையென்றே சொல்லலாம்).
இணையம் வளர ஆரம்பித்த பின் (அல்லது இணையத்தைப் பற்றி எனக்கு தெரிய ஆரம்பித்த பின்) அதன் மூலம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். இதில் அவ்வளவு மோசமான முடிவு இல்லை. அவ்வப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது பதில் வந்து விடும். பெரும்பாலும், அலுவலகத்திலிருந்து பல பேருக்கு அனுப்ப பலருக்கு முடியும் என்பதால்.
முடியாதவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், வெளியே சென்று வேலை மெனக்கெட்டு இணையத்திற்காக பணம் செலவு செய்து எனக்கு பதில் அனுப்ப நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என நினைத்துக்கொள்வேன்.
சிலர் அதையும் ஒழுங்காக கடைப்பிடிக்காமல் போனதால், தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசுவேன். வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும், வெளிநாட்டில் எல்லாம் இலவச தொலைபேசி இல்லையென. உண்மையில், இப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து பேசினால் தான் கட்டணம் மிகவும் குறைவு. அதெல்லாம் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முற்படுவது, செவிடன் காதில் சங்கூதுவது போல. வெளிநாட்டில் தான் பணம் மரத்தில் காய்க்கிறதே?
சரி. சொல்ல வந்ததை சொல்லாமல், எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன்.
சமீபத்தில் கல்லூரியில் என்னோடு படித்த ஒரு நண்பனுக்கு (SS என வைத்துக்கொள்வோம்) தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவன், நான் மற்றும் இன்னொரு நண்பன் (KK) மூவரும் ஒரு அணியாக கல்லூரியில் இருந்தோம். சென்னைக்கு செல்லும்போதெல்லாம் மூவரும் சந்திப்பதுண்டு.
நலம் விசாரிக்கும்போது அவனிடம் KK பற்றி விசாரித்தேன். அதற்கு SS சொன்ன பதில் தான் இந்தப்பதிவை எழுதத்தூண்டியது.
அவன் (SS) சொன்னான், KKவிடம் அவனே பேசி மாசக்கணக்கில் ஆகிறது என்று. நான் துபாயில் இருப்பதும், அவன் சென்னையில் இருப்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் என்று. எனக்கு ஒரே அதிர்ச்சி / ஆச்சரியம். அவனிடம் சொன்னேன், நான் KKவை மிகவும் விசாரித்ததாக அழைத்து சொல்லு, என்னைக் காரணம் வைத்தாவது நீ அவனிடம் பேசு என்று.
இது ஒரு சிறிய உதாரணம் தான். எத்தனையோ நண்பர்களை (மற்றும் சில சொந்தங்களையும்) இந்த மாதிரி 'இரு வழி' தொடர்பு இல்லாமல் நான் இழந்திருக்கிறேன். நான் தான் ஊரைவிட்டு இங்கே வந்தேன், அதனால் அப்படி நிகழ்ந்தது என்றால், ஒரே ஊரில் இருந்து கொண்டு மாதக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் (சந்திப்பு 2வது விஷயம்) இருப்பது சரியா?
நம்மில் எத்தனையோ பேர் சொந்த வேலைகளில் மூழ்கி பல உறவுகளையும், நண்பர்களையும் இழந்து விடுகிறோம். தொடர்பு கொள்ள எத்தனையோ வழிகள் இந்த கலியுகத்தில் - அப்படி இருந்தும்? ஒரு சிறிய 1 மணித்துளி தொலைபேசி அழைப்பு? ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை (இங்கே வெள்ளிக்கிழமை)யில் ஒரு சந்திப்பு என இருந்தால், இப்படி இழக்க நேரிடாது.
ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கிறோம், கடைசியில் தனிமையாக உணரும்போது இதையெல்லாம் நினைத்து வருத்தப்பட நேரிடும். உணர்வோமா?
6 Comments:
Nitharsanamaana unmai, nan Indiavil irundhu vanthu 7 mathankal thaan agirathu, aanal indha virisal perithaga arambipathai unarthirukiren. Meendum natpu / uravu murai valuvadaiya enathu prarthanaigal.
நன்றி நன்மணம்.
நீங்கள் உணர ஆரம்பித்ததோடு நிறுத்தாமல், அதை சரி செய்ய உங்களால் ஆனவற்றை செய்யுங்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்தால், அப்புறம் இழப்பு நமக்குத் தான்.
உங்கள் பிரார்த்தனைக்கும் நன்றி.
கல்கத்தாவிலிருந்த காலத்தில், சென்னை நண்பர்கள் பலர் பற்றி எனக்கு தெரிந்த அளவுக்கு கூட, பல சென்னை நண்பர்களுக்கு மற்றவர்களை பற்றி தெரியவில்லை.....
கல்லூரி முடித்த 2 வருடங்களில்லேயே இந்த நிலமையா என்று வருத்தமாயிருந்தது... இப்போது நிலமை பரவாயில்லை.... மாதம் இருமுறை எல்லோரும் சேர்ந்து வெளியே செல்கின்றோம்.... என்ன Girlfriend மாயையில் விழுந்தவர்கள் மட்டுமே இன்னும் மீள்வில்லை...
இப்போது நிலைமை பரவாயில்லை - நன்று யாத்ரீகன்.
மற்றவர்கள் இன்னும் மீளவில்லையென்றால், நீங்கள் ஏற்கனவே மீண்டு விட்டதாக அர்த்தம் கொள்ளலாமா? ;)
இக்கரையில் இருப்பதால் தான் அக்கரையை பற்றி நினைக்க தோன்றுகிறதோ???
வெளிநாட்டில் ரோடில் யாரவது தமிழ் பேசினால் பளிச்சென திரும்பி பார்ப்போம், ஆனால் ஊரில்...
///இப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து பேசினால் தான் கட்டணம் மிகவும் குறைவு. அதெல்லாம் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முற்படுவது, செவிடன் காதில் சங்கூதுவது போல. வெளிநாட்டில் தான் பணம் மரத்தில் காய்க்கிறதே?////
ரொம்ப சரியான வரிகள்
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்று தான் சொல்லுங்களேன் மனசு? உண்மையைத் தான் ஒத்துக்கொண்டாகி விட்டதே?
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!
Post a Comment
<< Home