ஓடும் இயந்திரம் புத்தியா சிங்
நேற்று 5 வயதுச் சிறுவன் புத்தியா சிங் தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளான். விடியற்காலை 4 மணிக்கு பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து ஓட ஆரம்பித்த இச்சிறுவன் புவனேஸ்வர் நகரை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தான். இச்சாதனையை லிம்கா சாதனை புத்தகம் அங்கீகரித்து, தனது அடுத்த பதிப்பில் இதை சேர்த்து பதிப்பதாக அறிவித்துள்ளது.
உண்மையில் 70 கி.மீ. வரை ஓட இருந்த புத்தியா, 65 கி.மீ. தூரத்தை கடந்த பின்பு (5 கி.மீ. முன்பே) ஓட முடியாமல் சுருண்டு விழுந்தான். சுமார் 300 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் புடை சூழ, வழியெங்கிலும் மக்கள் உற்சாகப்படுத்த இவன் இச்சாதனையை படைத்தான்.
யாரிந்த சிறுவன்? ஒரிசா மாநிலத்தில் உள்ள கொளதம் நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியைச் சேர்ந்தவன் தான் புத்தியா சிங். தகப்பன் இல்லாத இவனை, வேறு யாரிடமோ விற்க இருந்த இவன் தாயிடமிருந்து பிரஞ்சா சிங் என்பவர் இவனை தனது வளர்ப்பு மகனாக தத்து எடுத்துகொண்டார்.
பிரஞ்சா சிங் நடத்தும் ஜூடோ மையத்திற்கு இவனை கூட்டிச்சென்ற இவர், இவனது திறமையை கண்டறிந்தது தற்செயலாகத்தான். ஒருமுறை இவன் சில கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததால், இவனை மைதானத்தை சுற்றி ஓடச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஏதோ வேலையாக வெளியே சென்றவர், புத்தியாவை ஒட சொன்னதையே மறந்து விட்டார். 3 மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, புத்தியா தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தானாம். 3 மணி நேரம் ஓடியும், ஒரு களைப்பும் அடையாத இவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்த இவர், பின்னர் மராத்தான் ஓட்டத்திற்காக இவனை தயார் படுத்தி இருக்கிறார்.
ஒரிசா அரசாங்கத்திற்கும் பிரஞ்சா சிங்கிற்கும் சில பிரச்சினைகள் உருவாகின. அரசாங்கம் இச்சிறுவனுக்காக மாதம் ரூ. 500 உதவித்தொகையாக அறிவித்தது. அதே சமயம், இந்த சிறு வயதில் அவனை இவ்வாறு 'அதிக' சிரமத்திற்கு உட்படுத்துவதும் சரியா என கேள்வியையும் எழுப்பியது.
இந்த கேள்வியால் கோபமடைந்த பிரஞ்சா, வேண்டுமானால் அரசாங்கமே அவனை தத்து எடுத்து கவனித்துக்கொள்ளட்டும் என சொல்லியிருந்தார்.
அரசாங்கமோ போன வருடம் ஒரு நிபுணர் குழு அமைத்து, அந்த நிபுணர்கள் பரிந்துரைப்பின் படி புத்தியாவிற்கு போஷாக்கன உணவும், ஓட வேண்டிய அதிக பட்ச தூரத்தையும் சொல்ல வேண்டியது.
இதெல்லாம் கடைப்பிடிக்கப் பட்டதா என தெரியவில்லை. ஆனால், புத்தியாவை கேட்டால், "நான் ஒருசாவிற்காகவும் இந்தியாவிற்காகவும் ஓடிக்கொண்டே இருப்பேன்" என்கிறான் தனது மழலைப் பேச்சில். ஓடிய பின் இவனை சோதித்த இவனது டாக்டர், இவனது இதயத்துடிப்பு மற்றும் தசைகள் எல்லாம் சாதாரணமான அளவிலேயே இருப்பதாகத் தெரிவிக்கிறார். இதெல்லாம் ஒரு அதிசயம் என்றே அனைவரும் நினைக்கின்றனர்.
இந்த ஓடும் இயந்திரம், பெரிய அளவில் ஏதாவது சாதனை படைக்குமா அல்லது வழக்கம் போல சில காலத்திற்கு பிறகு காணாமல் போய் விடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
பி.கு. - இச்செய்தியை தூர்தர்ஷனைத் தவிர வேறு எந்த டிவியும் காட்டவில்லை. தெரியாதவர்களுக்காகவும், பார்க்காதவர்களுக்காகவும் இப்பதிவு.
7 Comments:
பதிவிற்கு நன்றி. நானே இது பற்றி ஒரு பதிவெழுதலாம் என எழுதத் துவங்கிய நேரத்தில் "தமிழ்மண தலைவாசலில்" உங்கள் பதிவைப் பார்த்தேன்.
இன்று காலை "சிட்னி மார்னிங் ஹெரால்டு" வலைதளத்தின் தலைவாசலில் புகைபடத்தோடு வந்திருந்த செய்தி. செய்தியைப் படிக்க கிளிக்கவும்.
இந்தியாவின் எந்த ஒரு முன்னனி செய்தி தளங்களிலும் இது பற்றிய செய்தியை இதுவரை என்னால் காண இயலவில்லை.தேர்தல் வெள்ளத்தில் சில முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளும் அடித்துச் செல்வதில் வருத்தமே!
deserves + :-)
நன்றி பொட்டீக்கடை.
தேர்தல் ஜுரத்தில் தமிழ் வலைஞர்களும் இருக்கிறார்கள் என்பதாலேயே நான் இதை எழுத முற்பட்டேன். என்னைப்போலவே நீங்களும் நினைத்திருந்தது மிக்க மகிழ்ச்சி.
+
நண்பரே!
நேற்று மலையாள செய்தி தாளில் புகைப்படம் பார்த்தேன், ஆனால் செய்தி என்னவென்று தெரியாது.
இன்று காலையில் பிரான்சு நாட்டின் யூரோ விளையாட்டு சேனலில் செய்தி கேட்டு அதிசயித்தேன். நேற்று நம்ம ஊரு தொலைக்காட்சிகளில் இச்செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்.
பரஞ்சோதி
தமிழ்த் தொலைக்காட்சியில் எதிலும் இதைக் காண்பிக்க வில்லை - பொதிகை உட்பட. அனைவருக்கும் தேர்தல் ஜுரம், வேறென்ன?
ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் கண்டிப்பாக காண்பித்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் பார்க்க வில்லை. வேறு யாராவது பார்த்திருக்கிறீர்களா?
புத்தியாவை அவ்வளவு தூரம் ஓட வைத்ததற்கு மனித உரிமைக் கழகம் விசாரணை நடத்த வேண்டும் என இன்றைய செய்தி! என்ன செய்வது? எதிலெடுத்தாலும், அதில் குறை காண்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.
நானும் இன்றைய நாளிதழ்களில் தான் கண்டேன். பையன் சுருண்டு விழுவதைப் பார்த்தால், exploitationனோ என்றுதான் தோன்றுகிறது. அனாதைப்பையனின் புகழ்மூலம் பணம் சம்பாதிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். இதை தவிர்க்க அரசே இந்தப் பையனை தத்து எடுத்து முறையான உணவும் பயிற்சியும் கொடுக்க வேண்டும்.
புத்யாசிங் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும், ஒரு வைரம், அதைப்பட்டை தீட்டவேண்டியது, அரசின் கடமை!
அரசு அந்தகடமையைச் செய்கிறதா என்று அவ்வப்போது பார்த்து தூண்டவேண்டடியது நமது பத்திரிக்கைளின் வேலை.
Post a Comment
<< Home