2006/05/04

கிரிக்கெட்டின் சிறந்த 'சண்டைகள்'

கிரிக்கெட் மைதானத்தில், ஆட்டத்தை விட சுவாரசியமான எத்தனையோ விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முதலாவதாக குறிப்பிட வேண்டியது 'வார்த்தை சண்டைகள்' (SLEDGING, as they call it).

எல்லா விளையாட்டிலும் இம்மாதிரியான வார்த்தைகள் உபயோகப்படுத்தப் பட்டாலும், கிரிக்கெட்டில் தான் இந்த வார்த்தை சண்டைகளைப்பற்றி நிறைய குறையாக பேசப்படுகிறது. ஏனெனில் இது 'உத்தமர்களின்' (Gentleman’s Game) ஆட்டமல்லவா? அதில் போய் இப்படி எல்லாம் அடித்துக்கொள்வது தவறு என நினைக்கிறார்கள் போலும்.

ஆனால் இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இதை மிகவும் உபயோகப்படுத்துபவர்கள் இது 'உத்தமர்களின் விளையாட்டு' என சொல்லிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும், ஆஸ்திரேலியர்களும் தான். மற்ற நாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தாமல் இல்லை. நமது வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் இதில் சளைத்தவர்கள் அல்லர் என்பது போட்டிகளைப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்பதிவு, நமது இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சில சுவையான நிகழ்வுகளைப்பற்றியது.



வெங்கடேஷ் பிரசாத் & ஆமிர் ஷோகெய்ல் - உலகக்கோப்பை, பெங்களூர்.

இந்தியாவின் 287/8 என்ற இலக்கை குறிவைத்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், ஆமிர் ஷோகெய்ல் மற்றும் சயீத் அன்வரின் அதிரடியான ஆட்டத்தினால், 15 ஓவர்களில் 110/1 என்ற நிலையை அடைந்தனர். ஆமிர் முக்கியமாக அனைவரின் பந்து வீச்சையும் சிதறடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறாக ஒரு பந்தை ஏறியடித்த ஆமிர், பிரசாத்தை நோக்கிச் சென்று, பந்து சென்ற திசையை காட்டி, அடுத்த பந்தும் அங்கே தான் செல்லும் என சைகை செய்தார். வழக்கமாக பந்து வீச்சாளர்கள் தான் இந்த மாதிரி சைகைகள், வார்த்தைகளை உபயோகிப்பார்கள். ஆமீர் மிகவும் அவசரப்பட்டு இம்மாதிரி செய்தார் என்பது அடுத்த பந்திலேயே தெரிந்தது.

அடுத்த பந்தையும் அதே மாதிரி அடிக்க நினைத்தார் ஆமிர். ஆனால், பாவம், தனது ஸ்டம்பை இழந்தார். வழக்கமாக அமைதியான பிரசாத், இம்முறை சும்மா இருக்கவில்லை. ஆமீரை நோக்கி, பெவிலியன் இருக்கும் திசையைக் காண்பித்து அங்கே போ என்றார். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு செல்வதைத் தவிர ஆமீருக்கு வேறு வழி?

இப்படி அதிரடியாக உடனடி அடி தனக்கு கிடைக்கும் என ஆமீர் மட்டுமல்ல, பிரசாத் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.


சச்சின் டெண்டுல்கர் & அப்துல் காதர் - 1989, பாகிஸ்தான்.

தனது முதல் தொடரில் ஆடிய சச்சினை பார்த்து, பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்லியது என்ன தெரியுமா? 'Dudh Pita Bhachcha ..ghar jaake dhoodh pee’ (வீட்டிற்கு போய் பால் குடிடா சின்ன பையா என). சச்சினின் பதிலடி, இளம் வீரர் முஷ்டாக் அகமதினை இரண்டு ஆறு ரன்னுக்கு அடித்தது தான்.

அடுத்து பந்து வீச வந்த அப்துல் காதர், “சின்ன பையன் பந்தை எல்லாம் அடிக்கிறாயே, என்னை அடி பார்க்கலாம்” என சொன்னார். அமைதியாக இருந்த சச்சின் தனது மட்டையினை பேச வைத்தார். அந்த ஓவரில் சச்சின் அடித்த ரன் - 6, 0, 4, 6, 6, 6.

(இந்த ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டதால், அதிகார்ப்பூர்வமாக நடக்கவில்லை. எனினும், ...)


ரவி சாஸ்திரி & மைக்கேல் விட்னி (தேதி தெரியவில்லை)

ஆஸ்திரேலியர்கள் இந்த மாதிரி வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகள் என்பது அனைவருக்கும் தெரியும் (அதை அவர்கள் ஒத்துக்கொள்ளா விட்டாலும்). அவர்களுக்கே அந்த மருந்தினை கொடுத்தார் ரவி சாஸ்திரி.

மைக்கேல் விட்டினி ஒருமுறை 12'வது ஆட்டக்காரராக களத்தில் இருந்தார். பந்தை அவரை நோக்கி அடித்த ரவி, ரன் எடுக்க நினைத்தார். அப்பந்தை தடுத்த விட்டினி, 'நீ கோட்டை விட்டு வெளியே வந்தால், நான் உன் **** தலையை உடைத்து விடுவேன்' என்றார். ரவியின் பதில் "நீ பேசும் அளவுக்கு, பேட்டிங் செய்தால், 12'வது ஆட்டக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்பதே. விட்டினியின் முகம் எப்படி போயிருக்கும்?


கிரன் மோரே & ஜாவித் மியான்டட் - 1992 உலகக்கோப்பை

ஜாவித் இல்லாமல் இந்தத் தலைப்பில் எழுத முடியுமா? கிரன் மோரேவின் அதிக முறையீடுகளின் காரணமாக கடுப்பாகி போன ஜாவித், ஒரு முறை ரன் அவுட்டிலிருந்து தப்பித்தவுடன் குதித்த குதி யாரும் மறந்திருக்க முடியாது. குதித்தது அவருக்கு மட்டுமே மகிழ்ச்சியை கொடுத்தது, கடைசியில் இந்தப் போட்டியில் ஜெயித்ததோ இந்தியா தான்.


சுனில் கவாஸ்கர் & டெனிஸ் லில்லீ - 1981

மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில், 70 ரன்னுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கருக்கு எதிராக லில்லீ LBW அப்பீல் செய்தார். கவாஸ்கர் நடுவருக்கு தனது மட்டையக் காண்பித்து தான் பந்தை மட்டையால் தொட்டிருந்தேன் என உணர்த்தினார். ஆனாலும், லில்லீயோ, பந்து எங்கே பட்டது என கவாஸ்கரிடம் சென்று, தொட்டுக் காண்பித்தார. கடைசியில், முடிவு லில்லிக்கு சாதகமாகவே அளிக்கப்பட்டது.

மெதுவாக பெவிலியனை நோக்கி சென்ற கவாஸ்கரை நோக்கி தனது வார்த்தைகளை வீசினார் லில்லி. அதுவரை பொறுமையாக இருந்த கவாஸ்கர், தனது சக ஆட்டக்காரரான சேத்தன் சௌகானை அழைத்துக்கொண்டு, ஆட்டத்தை விட்டுத்தருவதாக சொன்னார். இது மிகப்பெரிய சர்ச்சையாக இன்னும் பேசப்பட்டு வருகிறது.

பின்னாளில், தனது புத்தகத்தில் இதைப் பற்றி வருத்தப்பட்டு கவாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும்....


பார்திவ் பட்டேல் & ஸ்டீவ் வா

கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது, ஸ்டீவ் வா தனது கடைசி டெஸ்ட் தொடர்ப்பந்தயத்தினை ஆடினார். 4வது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க போராடிக்கொண்டிருந்த வா'விற்கு தன் வயதில் பாதியே ஆன பார்த்திவ் அளித்த 'கசப்பு' மருந்தும் அதற்கு ஸ்டீவின் பதிலும்.

பார்த்திவ்: இன்னும் ஒரே முறைதான் உன்னுடைய 'பெருக்கல்' (sweeping shot) ஆட்டம், அதற்கப்புறம் நீ காலி.

ஸ்டீவ்: கொஞ்சம் மரியாதையுடன் பேசு. நான் 18 வருடங்களுக்கு ஆடத்துவங்கிய போது, நீ இன்னும் படுக்கையில் மூத்தி*** போய்க் கொண்டிருந்தாய்.

ரொம்பத்தான் கசந்து விட்டது போல அவருடைய சொந்த மருந்து?



இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அதையெல்லாம் எழுத எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு படிக்க பொறுமை இருக்காது என்பதால் தான் வெறும் இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்ட பதிவு இது!

நன்றி!

4 Comments:

At 11:13 AM, May 04, 2006, Blogger பரஞ்சோதி said...

நண்பரே!

கிரிக்கெட்டில் மிகவும் சுவாரசியமான பதிவை எழுதியிருக்கீங்க.

அப்படியே சம்பவ படங்களையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தொடரட்டும் உங்கள் கிரிக்கெட் பதிவுகள்

 
At 11:15 AM, May 04, 2006, Blogger Muthu said...

நண்பா,

மிகவும் ரசித்தேன்.சில சம்பவங்கள் புதுசு..மற்றதெல்லாம் நான் கேள்விபட்டதுதான்..

குடும்ப சண்டையை நீங்கள் தவிர்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

(மெக்ராத் * சர்வான்)

 
At 11:53 AM, May 04, 2006, Blogger Unknown said...

நன்றி முத்து / பரஞ்சோதி.

முத்து - குடும்ப சண்டை நமது இந்தியர்கள் சம்பந்தப்படாதது என்பது முதல் காரணம். இரண்டாவது, அதை எழுதினால், நிறைய 'நட்சத்திரங்கள்' தான் இருக்கும், வார்த்தைகளுக்குப் பதிலாக. படிக்கக் கூடிய வார்த்தைகளா அவைகள்?

ஸ்டீவ் வா கிப்ஸிடம் சொன்ன 'நீ விட்டது கேட்சை அல்ல, உலகக் கோப்பையை' கூட விட்டுவிட்டேனே - மிகப் புகழ்பெற்றதாயினும்?

பரஞ்சோதி அவர்களே, இவற்றில் சிலவற்றுக்கான வீடியோ சுட்டி கூட கிடைத்தது. நான் தான் போடவில்லை.

 
At 4:12 PM, May 16, 2006, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

1980-81 என நினைக்கிறேன், மியாண்டாட் மட்டையை ஒங்க லில்லி ஸ்டம்பை பிடுங்கி மிரட்ட....ஹிண்டுவிலோ, ஸ்போர்ட்ஸ்டாரிலோ கண்டதாக நினைவு. ஜாவேத் மியாண்டாடும் டென்னிஸ் லில்லியும் மோதிய அச்சம்பவம் குறித்து மேல்விவரங்கள் தெரியுமா உங்களுக்கு?

அம்பயர் ஷாகூர் ராணாவிற்கும், இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கேட்டிங்கிற்கும் நிகழந்த மோதலும் பிரசித்தி பெற்றது.

1986-87ல் ஒருநாள் போட்டி முடிவில், ரவி சாஸ்திரியும், ஜாவேத் மியாண்டாடும் மோதியது கூட லேசாக நியாபகத்திற்கு வருகிறது.

நீங்கள் குறிப்பிட்ட கவாஸ்கர்-லில்லி லடாய்தான் உள்ளதுக்குள்ளேயே ரொம்பவும் சர்ச்சையைக் கிளப்பிய ஒன்று. தொடர்ந்து இந்திய ஆட்டக்காரர்களுக்கு எதிரான முடிவுகளையே தந்து கொண்டிருந்த அம்பயர்களின் ஓரவஞ்சனைத்தனம் அதிகமாக விமர்சனத்திற்குள்ளானது. ஏற்கனவே ஒரு டெஸ்ட்டைப் பறிகொடுத்த கடுப்பில் இந்திய வீரர்கள் இருந்தனர்; மேலும், தனிப்பட்ட முறையில் கவாஸ்கர், ராபர்ட்ஸ், ஹாட்லி, இம்ரான், போத்தம், ஹோல்டிங், தாம்ஸன், வில்லிஸ், ஓல்ட் என அத்தனை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து கவாஸ்கர் சென்சுரி அடித்திருந்தாலும், டென்னிஸ் லில்லியின் பந்துவீச்சை சமாளித்து செஞ்சுரி அடிக்க வாய்க்கவில்லை அவருக்கு. இந்த மெல்பேர்ன் டெஸ்டில் கிட்டத்தட்ட 70 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில்தான் இந்த lbw சம்பவம் நிகழ்ந்தது.

கடைசி நாள் ஆட்டம் வேறொரு கதை சொல்லும்...ஆஸ்திரேலியா வெற்றி பெற 125 ரங்களே இருந்த சூழலில், கடைசி நேரத்தில் கபில்தேவ் களத்தில் இறங்கி, கங்காரூக்களை 83 ரன்னிலேயே சுருட்டினார்......

1980-81 தொடரே நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 5 மணிக சுமாருக்கெல்லாம் துவங்கும் (பெர்த் மட்டும் விதிவிலக்கு) 11 மணிக்கெல்லாம் முடிந்து விடும். அம்மா, பள்ளியில் எனக்கு `லஞ்ச்' கொடுக்க வரும்போது, உடனிருக்கும் பள்ளித்தோழர்களும், சில நேரங்களில் டீச்சர்களும், ஸ்கோர் எவ்வளவு aunty என்று கேட்பார்கள். அதற்காகவே அம்மா, ஒரு துண்டு காகிதத்தில், கவாஸ்கர் lbw யார்ட்லி 15, சௌகான் விக்கெட் பாஸ்கோ 35 என்ற ரீதியில் எழுதிக்கொண்டு வருவார்.....இதோடு, அடிலய்டு டெஸ்டில் சந்தீப் பாட்டிலின் 174 ரன் குவியல், க்ரெக் சாப்பலின் இரட்டைச் சதம், மெல்பர்னில் விஷ்வனாத்தின் சதம்...பல நினைவு கூறத்தக்க சம்பவங்கள். இந்த டெஸ்டில் கபில்தான் இந்திய வெற்றிக்குக் காரண கர்த்தரெனினும், விஷ்வநாத்திற்குப் போனது `மேன் ஆப்ஃ தி மேட்ச்'.

//இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அதையெல்லாம் எழுத எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு படிக்க பொறுமை இருக்காது என்பதால் தான் வெறும் இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்ட பதிவு இது!?//

அன்புடையீர், நான் இருக்கிறேன் படிப்பதற்கு.........தெரிந்ததை எழுதவும்.

பழசைப் பற்றிப் பேசுவதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.

 

Post a Comment

<< Home