2006/05/10

புத்தியா சிங் - தொடரும் சர்ச்சைகள்

இதற்கு முன்பு புத்தியா சிங்கைப் பற்றி எழுதிய பதிவு இதோ. யாரவது ஒருவர் சற்றே புகழ் அடந்து விட்டால், அவரைச் சுற்றிய சர்ச்சகைகளுக்கும் குறைவில்லை என்பது மறுபடி நிரூபணமாகியுள்ளது. (உலக அளவில், சமீபத்தில் ஷேன் வார்னே).

புத்தியா சிங்கை அவன் வயதுக்கு மீறிய ஓட்டங்களை ஓட வைத்து கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகள் நல சங்கம் ஒன்று புகார் கூற, ஒரிசா அரசாங்கம் அச்சிறுவனை சோதனைக்குள்ளாக்கியது. முதல் கட்ட சோதனையை முடித்த மருத்துவர்கள், புத்தியாவிற்கு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் (அதிக இரத்த அழுத்தம், அதிக யூரிக் அமிலம் அளவு போன்ற), அது பின்னாளில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனவும் அறிக்கையை விடுத்தார்கள். இதனால், புத்தியா இனிமேல் இந்த மாதிரி மராத்தான்களில் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதிக்கவேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதை கடுமையாக எதிர்த்த அவரது பாதுகாப்பாளர் மற்றும் பயிற்சியாளரான பிரஞ்சா தாஸ் இதெல்லாம் தவறானது என்றும், எத்தனையோ குழந்தைகள் பசி பட்டினியுடன் இருக்கும் போது அவர்களையெல்லாம் கவனிக்காமல், புத்தியாவிற்கு மட்டும் அக்கறை காட்டும் அத்தொண்டு நிறுவனத்தில் மேல் வழக்குப் போடப்போவதாகவும் அறிவித்தார். மேலும் காவல் துறை புத்தியாவை வலுக்கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதனால் பாதிக்கப்பட்டிருந்த புத்தியாவின் இரத்த அழுத்தம் எப்படி சாதரணமாக இருக்க முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.

இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவும் தன் பங்குக்கு கொஞ்சம் சொல்லியிருக்கிறார். புத்தியா மிகவும் சிறிய வயதாக இருப்பதால் அவன் இப்படி அதிக் தூரம் ஓடுவது தவறு என்றும், அவனுக்குள் இருக்கும் திறமையை முறையான பயிற்சியில் ஈடுபடுத்துவதே நல்லது என்றும் தெரிவித்தார். மில்கா சிங் கூட கருத்துத் தெரிவித்திருப்பதாக தெரிகிறது (என்னவென்று சரியாகத் தெரியவில்லை).

இச்சர்ச்சையோ இன்று ஒரு புதிய திருப்பத்தை எடுத்தது. புத்தியாவை பரிசோத்தித்த ஒரு தனியார்த்துறை இதய மருத்துவர், அரசாங்க அறிக்கை தவறு என மறுத்துள்ளார். பி.கே. பிரதான் எனும் இவர், இரண்டரை மணி நேரம் புத்தியாவை பரிசோதித்த பின், முன்பு அரசாங்கக்குழு அறிவித்தது போல எந்த ஒரு பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார். அரசாங்க மருத்துவர் குழு அளித்த அறிக்கை மிகவும் அவசரமான ஒன்று என்றும், விஞ்சானப்பூர்வமற்றது எனவும் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்ல! அவனது ஓட்டத்தில் பங்கெடுத்துள்ள CRPF மீதும் ஒரு விசாரணை நடக்கிறது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு துறை, இந்த ஓட்டத்தில் ஏன், எப்படி பங்கேற்கலாம் என கேள்வி.

இதன் நடுவில் ஒரிசாவின் தொலைக்காட்சிகளோ, புத்தியா பங்கெடுக்கும் ஒரு பாட்டு ஒன்றை ஒளிபரப்பி அவனை ஒரு நாயகனாக்கி விட்டது (அவனது கையில் தேசியக்கொடியுடனாம்).

அரசாங்கமும் ‘வழக்கம் போல’ எந்த ஒரு முடிவிற்கும் வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. தனது முடிவை தள்ளி வைப்பதாக அறிவித்திருக்கிறார்கள் இப்போது.

எது எப்படியோ, புத்தியாவை வைத்து அனைவரும் 'விளையாடுகிறார்கள்' என்பது மட்டும் தெளிவாகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம், புத்தியாவிற்குள்ளே ஒரு அசாதாரணமான திறமை ஒளிந்திருக்கிறது. அவனது பயிற்சியாளர் அதைக்கண்டு பிடித்ததால் அதை வைத்து அவர் 'வாழ்க்கையை' ஓட்ட நினைக்கிறார். அதற்கு யாரும் தடையாக வந்துவிடுவார்களோ என பயந்து தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஏதாவது சொல்லி மறுக்கிறார். ஒரு ஜூடோ பயிற்சியாளரான இவர் எப்படி புத்தியாவை வருங்காலத்தில் மராத்தான் போட்டிக்கு தயார்படுத்த முடியும்? இது வரை அச்சிறுவன் ஓடியது முற்றிலும் அவனது திறமையால் தானே தவிர, கண்டிப்பாக இவரது பயிற்சியால் மட்டுமே அல்ல என நினைக்கிறேன்.

புத்தியாவின் மீது 'திடீர்' அக்கறை காட்டும் தொண்டு நிறுவனம், ஒரிசா அரசாங்கத்தையோ அல்லது அதன் அனுமதியுடனோ தானே அவனை தத்து எடுத்து அவனது திறமையை முறையான பயிற்சியில் ஈடுபடுத்தி வளர்க்கலாம்.

இப்படி செய்தால், ஒவ்வொரு முறையும் வெறுங்கையுடன் திரும்ப வரும் ஒலிம்பிக் போட்டியில் வருங்காலத்தில் தங்கத்துடன் புத்தியா சிங் திரும்புவான் என கண்டிப்பாக கூறலாம். செய்வார்களா?

4 Comments:

At 9:52 AM, May 10, 2006, Blogger நாமக்கல் சிபி said...

இன்று செய்தித்தாளில் நானும் இதுபற்றிய செய்தியை படித்தேன். படித்தவுடன் உங்களிடமிருந்து ஏதேனும் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன்.

 
At 9:55 AM, May 10, 2006, Blogger Unknown said...

தேர்தல் முடிந்து விட்டது, வாக்கு எண்ணிக்கையும் நாளைக்குத் தான். இன்று எழுதினால் தான் கொஞ்சம் பேராவது படிப்பார்கள் என நினைத்து இன்று எழுதினேன்.

உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய மகிழ்வுடன், நன்றி சிபி!

 
At 10:21 AM, May 10, 2006, Blogger நன்மனம் said...

ஒரே ஒரு சந்தோஷம், இந்த சிறுவனிடம் திறமை இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை.

சீனாவில் இது போல் ஒரு கூடைபந்து வீரரை அரசு தத்தெடுத்து அவரை வளர்த்து, நாடும் பெருமை அடைந்தது.

இந்த சிறுவனுக்கு எவ்வளவு செலவு செய்ய போகிறது அரசு... அதிக பட்சம் வருடத்திற்கு 2 லட்சம் இன்னும் 10 வருடம்? இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

4 வருடம் இந்த சேவை மையங்களுக்கு ஓரிசா எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையா?

இந்த உலகில் கண்டு எவ்வளவு கண்டு பிடிப்புகளுக்கு கண்டு பிடித்தவர்களை(இருந்ததை தான் அவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்) நாம் பாராட்டி உள்ளோம் அது போல் இந்த பயிற்ச்சியாளரையும் பாராட்டி அதே நேரம் நாட்டுக்கு பெறுமை தேடும் வழி செய்வோம்.

தயவு செய்து பயிற்ச்சியாளரை ஓதுக்க வேண்டாம்.

 
At 10:49 AM, May 10, 2006, Blogger Unknown said...

நன்மணம்

நன்றி. அரசாங்கத்திற்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. விளையாட்டுத்துறையில் பின் தங்கி இருக்கிறோம் என அடிக்கடி சொல்லிக்கொள்ள மட்டும் தெரிகிறது.

பயிற்சியாளரை ஒதுக்க வில்லை. திறமையைக் கண்டு பிடித்த பெருமையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு முறையான பயிற்சியாளரிடம் விட்டு வழி விடுவதே அவரது பெருமையினைக் கூட்டும். இப்படி 'சண்டைகளிலும், சர்ச்சைகளிலும்' ஈடுபட்டால், நான் மட்டுமல்ல, அனைவருமே சந்தேகம் தான் படுவார்கள். அவர் வளர்ப்பு தந்தையாகவே இருக்கலாமே?

 

Post a Comment

<< Home