2006/06/08

நம்பர் படுத்தும் பாடு

நம்ம நிலவு நண்பன் அவர்கள் தனது பதிவில் அவருக்கு ஏற்பட்ட எண்கள் பற்றிய அனுபவத்தைப் நேற்று தான் படித்தேன். அவருக்கு அப்படி ஒரு அனுபவம், பாவம் என நினைத்துக்கொண்டேன். நமக்குக் கூட இந்த நம்பர்களாலே கடுப்பான அனுபவங்கள் இருக்கே என நினைத்தேன். ஆனா, அது மறுபடியும் நடக்கனுமா, அதுவும் நேத்தே?

போன வாரம் நட்ட நடு ராத்திரியிலே நம்ம இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை தன்னந்தனியா பார்த்துகிட்டு இருந்தேன். தோத்துகிட்டு வேற இருந்தாங்களா, ரொம்ப கடுப்பா இருந்தது. ஒரு பன்னிரண்டு மணி இருக்கும், யாரோ வாசல்லே மணி அடிக்கறாங்க. யாருடா அவன் இந்த நேரத்திலேனு யோசிச்சிகிட்டே போயி கதவை திறந்தா, "சார் பரோட்டா பார்சல் ஆர்டர் பண்ணீங்களே, இந்தாங்க சார்" என ஒருத்தன். எவன் அவன் இந்த நேரத்திலே பார்சல் ஆர்டர் பண்றவன்னு தெரியலே. அப்படியே செய்தாலும், அவன் வீட்டு நம்பரும் என் வீட்டு நம்பரும் ஒத்துப்போகனுமா என்ன?

இது இப்படின்னா, நேத்து ராத்திரி நல்லா தூங்கிட்டு இருந்தேன் (ஒரு வாரமா தொடர்ந்து கிரிக்கெட்டை பார்த்துகிட்டு இருந்தா?). அதே நேரம், அதே மாதிரி மணி அடிச்ச மாதிரி இருந்தது தூக்கத்திலே. கனவோ இருக்குமோனு நினைச்சேன் அரைத்தூக்கத்திலே. மறுபடியும் மணி அடிச்சது!

சரி தான் கனவு இல்லை என எழுந்து போய் கதவைத் திறந்தால், வேறு ஒரு ஓட்டலிலிருந்து பார்சல். எடுத்து வந்தவன் என்னோட தூக்கம் வழியற முகத்தைப்பார்த்து கொஞ்சம் பயந்து தான் போயிட்டான். தமிழ் ஆளு என்பதாலே, கொஞ்சம் பொறுமையா அவன் கிட்டே சொன்னேன், "இந்த நேரத்திலே யாருப்பா பார்சல் ஆர்டர் பண்ணுவா? என்னைப்பாரு, பார்சல் ஆர்டர் பண்ணவன் மாதிரியா இருக்கு" என்று. அவன் வருத்தப்ப்ட்டு சாரி சொல்லிட்டு போயிட்டான். மவனே எவன்டா அவன் இந்த நேரத்திலே பார்சல் ஆர்டர் செஞ்சு என்னை அப்பப்போ கொல்றவன்னு கண்டு பிடிக்கனும் என நினைத்துக்கொண்டே தூங்கினேன்.

இந்த மாதிரி நம்பர் மாறி வர பிரச்சினையிலே முக்கியமானது ராங் நம்பர். தொல்லைபேசி (அதாங்க தொலைபேசி) உபயோகப்படுத்தற ஒவ்வொருத்தருக்கும் ராங்கு காட்டற ராங் நம்பர் கண்டிப்பா வந்து இருக்கும். அது வர நேரம் காலம் அப்புறம் நம்ம மூடு எல்லாம் சில / பல சமயம் பொருந்தாத நேரத்திலே வந்து எல்லார் உயிரையும் எடுத்து இருக்கும். ஆனா எனக்கு வந்து இருக்கு பாருங்க அந்த மாதிரி யாருக்கும் வந்து இருக்குமானு தெரியலே. அதுவும் எனக்கு 2 தடவை தான்.

சுமார் 2 வருஷத்துக்கு முன்னாடி விடியற்காலை 4 மணிக்கு, ஒரு செல்போன் கால். என்னடா இது இந்த நேரத்திலே போயி போன் வருதே, ஏதோ முக்கியமான போனோ என நினைச்சுக்கிட்டு நம்பரை பார்த்தா, உள்ளூர் நம்பர். அதுவும் தெரியாத நம்பர். சரி எழுந்தாச்சி, எடுத்து வைப்போம்னு எடுத்த, அடுத்த பக்கம், 'அலோ' என ஒரு பெண் குரல் (அதுவும் ஒரு வயதான பெண் குரல்). அரேபிய மொழியில் அவர் என்னவோ கேட்ட பின் தான் தெரிஞ்சிது ராங் நம்பருடா மவனேன்னு.

மறுபடியும் ஒன்று அல்லது ஒன்றரை வருடம் கழிச்சி அதே மாதிரி, அதே நேரம், அதே நம்பரிடம் இருந்து அதே அரபிப்பெண். என்னனு சொல்றது? ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கனும் அந்த அம்மா போன் செய்யற நம்பருக்கும், என்னோட நம்பருக்கும்.

ஆனா, எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் - அது என்னாங்க விடியற்காலையிலே 4 மணிக்கு போன் செய்து பேசறது? ஒருவேளை என்னொட தூக்க்கத்தை கெடுக்கறதுக்காகவே இருக்குமோ?

என்னவோ போங்க!

16 Comments:

At 5:12 PM, June 08, 2006, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

அய்யோ பாவம் நீங்க..நல்லவேளை உங்களுக்கு நான் பரவாயில்லை..இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்குங்க.. :)

 
At 5:17 PM, June 08, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

துபாய்வாசி, உங்க வீட்டு நம்பர் குடுங்க.. இங்கேர்ந்தே ரெண்டு நாள் பார்சல் ஆர்டர் பண்ணி விடுறேன் :)

 
At 5:14 AM, June 09, 2006, Blogger வடுவூர் குமார் said...

நண்பரே,இதுக்குதான் நான் தூங்க போகும்போதே கைத்தொலைபேசியை அணைத்துவிடுவேன்.

தெரிந்தவர்கள் வீட்டு எண்ணுக்கு கூப்பிட்டால் போதுமே.

எழுதுங்க எழுதுங்க நாங்களும் துபாயைப்பற்றி தெரிந்துகொள்கிறோம்.

 
At 9:55 AM, June 09, 2006, Blogger Unknown said...

ரசிகவ்!

என்னோட நிலமைக்கு நீங்க பரவாயில்லைனு தெரிஞ்சிதா? இனிமேல 'கடிகார நேரத்தை கூட்டியோ குறைச்சோ' வைச்சிக்கோங்க! (புரியுதா? - ;0)

 
At 9:57 AM, June 09, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்,

எனக்கு இப்போ பெரிய சந்தேகம் வந்த்திடிச்சி. IP address வைச்சி ஏதாவது நீங்க தான் செய்து இருப்பீங்களோன்னு!

நீங்க தான் சமைச்சி சாப்பிடுற ஆளாச்சே? பார்சல் எல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?

 
At 9:59 AM, June 09, 2006, Blogger Unknown said...

வடுவூர்க்காரரே,

கைத்தொலைபேசியில் எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் போன் வரும் - வெளிநாட்டில் இருப்பதால் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. சென்னையில் இருக்கும் போது நீங்கள் சொல்லியது போலத்தான் நானும் செய்வதுண்டு!

நன்றி!

 
At 1:55 PM, June 09, 2006, Blogger நன்மனம் said...

// பொன்ஸ் said...
துபாய்வாசி, உங்க வீட்டு நம்பர் குடுங்க.. இங்கேர்ந்தே ரெண்டு நாள் பார்சல் ஆர்டர் பண்ணி விடுறேன் :)//

:-))

இந்டெர்நேசனல் பார்சலுக்கு காசு ஆன் டெலிவரியா இல்ல அட்வான்ஸ் பேமண்டா. இது சரியா தெரிஞ்சாதான் து.வா அட்ரஸ் கொடுப்பாரு. இந்த பதிவுல இருக்கற பார்சல்னால தூக்கம் மட்டும் தான் செலவு. சரியா து.வா:-))

 
At 2:43 PM, June 09, 2006, Blogger Geetha Sambasivam said...

துபாய்வாசி, கிரிக்கெட் பார்க்கறதைத் தவிர துபாயிலே வேறே ஒண்ணும் செய்யறது இல்லையா?
இன்னிக்குக் காலையிலே ம4-நி44-செ44-க்கு என்னை கூப்பிட்டது நீங்கதான்னு இப்போ புரிஞ்சது.

 
At 2:47 PM, June 09, 2006, Blogger Unknown said...

பதிவுப் படிச்சு வந்தச் சிரிப்பை விட நம்ம ஞானியார் பின்னூட்டம் சிரிப்பை அள்ளிட்டுப் போகுதுப்பா:-)

 
At 6:13 PM, June 09, 2006, Blogger Unknown said...

கீதா மேடம்,

இவ்வளவு அனுபவப்பட்டுட்டு நானே அந்த 'ராங் கால் தப்பை நானே மத்தவங்களுக்கு செய்வேனா? அதுவும் தலைவிக்கு ??? அப்புறம் இங்கே என் வீட்டுக்கு ஒட்டகத்திலே ஆளு வந்துடுவாங்களே? (சென்னையிலே தான் ஆட்டோ!).

கிரிக்கெட் தவிர இன்னைக்கு கால்பந்து இருக்கே? அதுவும் பார்ப்பேன். பார்சல் அனுப்பறவங்க அனுப்பலாம்!!!

 
At 6:14 PM, June 09, 2006, Blogger Unknown said...

சிரிப்பா தேவ்? இன்னைக்கு ராத்திரிக்கே உமக்கும் ஒரு பார்சல் வரும் பாருங்க!

 
At 6:15 PM, June 09, 2006, Blogger Unknown said...

நன்னு,

பொன்ஸ் அதெல்லாம் உஷாரா இருப்பாங்க. டெலிவரி பண்ணிட்டு காசு வாங்கிக்க சொல்லுவாங்க.... அதுலே எல்லாம் அவங்க கில்லாடி!

 
At 6:21 PM, June 09, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

துவா,
//அப்புறம் இங்கே என் வீட்டுக்கு ஒட்டகத்திலே ஆளு வந்துடுவாங்களே? (சென்னையிலே தான் ஆட்டோ!).
//
உங்க வீட்டுக்கு ஒட்டகத்துல ஆளா? இன்னோரு பார்சல் சொன்னா போதுமே!! ஒட்டகம் எதுக்கு ?!! வீண் செலவு :)

 
At 7:12 PM, June 09, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்,

ஒரு முடிவிலே தான் இருக்கீங்க போல.

எதுக்கும் இன்னைக்கு ராத்திரி சாப்பிடாம படுக்க போறேன். எப்படியும் ஒரு பார்சல் வரப்போகுதுனு தெரியுது!

 
At 7:21 PM, June 09, 2006, Blogger Sivabalan said...

துபாய் வாசி,

எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கும் போல. ஏன்னா, என்னுடை செல் போன் நம்பர் இதற்கு முன்னாடி ஏதோ மெக்சிக்கன் ஒருவரிம் இருந்திறக்கிறது. அடிக்கடி மெக்சிக்கன் மொழியில் எதவாது போன் வரும். ஒன்னும் புரியாது.

சிவபாலன், சிகாகோ.

 
At 7:24 PM, June 09, 2006, Blogger Unknown said...

சிவபாலன்!

சிகாகோ என்றாலும், துபாய் என்றாலூம், வித்தியாசம் பெரியதாய் இல்லை போலிருக்கிறதே?

நிலவு நண்பன் சந்தோஷப்பட்டது போல நானும் சந்தோஷம் அடைய வேண்டியது தான்!

 

Post a Comment

<< Home