2006/07/26

சொர்க்க வாசம் முடிந்தது!

சென்னைக்கு விடுமுறைக்குப் போவதாக சொல்லிவிட்டுத் தான் போனேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மொத்தமாக எனது மிகப்பெரிய நன்றி.

ஊருக்குப் போனானே, என்ன ஆனான் என ஒருத்தருக்குமே அக்கறை இல்லை. (வலைப்பூக்களில் இதெல்லாம் சகஜமப்பா என யாருப்பா அங்கே குரலு விடறது? மனசாட்சியா, சரி சரி!).

ஊருக்குப் போனது நமது 'இந்தியன்' விமானத்தில் தான். விமானம் நிறைய பேருடைய பயமுறுத்தல்களையும் மீறி, வெறும் 30 நிமிட தாமதத்திலேயே கிளம்பி விட்டது. ஏறும் போதும் இறங்கும் போதும், ஆட்டம் மிகவும் பலமாகவே இருந்தது (சிறிய A-320 விமானம் என்பதால்).

இன்னொரு முக்கியமான முன்னேற்றம் - விமானப்பணிபெண்கள். வழக்கமாக ஓய்வு பெறும் வயதில் இருக்கும் பணிப்பெண்களையே பார்க்கவேண்டி இருக்கும் இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் (ஜொள்ளுப்பாண்டி கவனத்திற்கு!).

சென்னையில் - சொர்க்கம் என நான் சொன்னாலும், அங்கே இருப்பவர்களுக்கு அது அப்படி தெரியவில்லை என்றே தோன்றுகிறது. எல்லாரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் நேரமே இல்லை. முதலெல்லாம் 5 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது, இப்போது நிறைய பேர் 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.

ஊர் முழுவதும் கார்கள் அதிகமாகி இருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பை விட நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் (காரணம் என்ன? தெரியவில்லை).

ஆட்டோ ஓட்டுநர்களிடம் மீட்டர் என்ற வார்த்தையைப்பற்றி கேட்க முடியாது - அவர்களும் மறந்து விட்டார்கள், மக்களும் கேட்பதில்லை. ஷேர் ஆட்டோ நன்றாக ஓடுகிறது (வசதியாகவும் இருக்கிறது). யாரைப்பார்த்தாலும் பெட்ரோல் விலையைப்பற்றித் தான் பெருமூச்சு விடுகிறார்கள் (ஆனாலும் வாகனங்கள் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை).

நிலம், வீடு, மனை - எதுவும் வாங்குவதாக இருந்தால் இப்போதே வாங்க வேண்டும். எல்லாம் டைனோசார் விலை போல இருக்கிறது (எத்தனை நாள் தான் யானை/குதிரை என சொல்லுவது?). காரணங்கள் பல சொல்கிறார்கள் - எது உண்மையென தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் - இங்கே இருக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க விடுமுறையில் போனால், ஜூன் / ஜூலை மாதத்தில் சென்னையும் 36 - 39° அடித்து கொளுத்தியது. என்னுடைய ராசி, நான் இங்கு வந்ததும் அங்கே நல்ல மழையாம்! நேரமப்பா நேரம்!

வலைப்பூக்களில் இந்த விடுமுறையின் போது என்ன என்ன நடந்தது என இன்னும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. மெதுவாகத் தான் படிக்க வேண்டும். காரணம், சென்னை இணையதள கணினிகளின் நிலைமை. அதில் தமிழ்மணத்தையும், தேன்கூட்டையும் பார்க்க முயன்று நொந்து போய் வந்துவிட்டேன். இணையதள மையங்களில் சிலர் அடையாள அட்டை கேட்கிறார்கள், பலர் கேட்பதில்லை. எப்படி இருந்தாலும், கணினிகளின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

பொதுவாக சென்னையில் பல மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகிறது - அதுவும் ஒரே வருட இடைவெளியில். சில நல்ல மாறுதல்கள், சில மற்றபடி. என்ன இருந்தாலும், சென்னை சென்னை தான்!


மீண்டும் வலைப்பூவில் வந்து இணைந்த மகிழ்வுடன்,
துபாய்வாசி

14 Comments:

At 12:41 PM, July 26, 2006, Blogger நன்மனம் said...

வாங்கய்யா.... வாங்க.... என்ன வாங்கி வந்தீக சென்னையில் இருந்து......

தமிழ்மணத்தில ஒன்னும் பெரிசா நடந்துடல....

//இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் (ஜொள்ளுப்பாண்டி கவனத்திற்கு!).//

ஏன் நீங்க கவனிக்கலியோ :-)

//ஊர் முழுவதும் கார்கள் அதிகமாகி இருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பை விட நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள்//

முதல் இரண்டு வரிக்கும் கடைசி வரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ.

:-)

 
At 12:42 PM, July 26, 2006, Anonymous Anonymous said...

>>> இப்போது சிறு வயதுப்பெண்கள்

ஊட்டுக்காரம்மா பக்கதுல இல்லீங்களா ? ;-)

>>> நிறைய பல் மருத்துவர்கள்

ஆமாங்க ஆமா.. ஏன்னுதான் புரியல..

சென்னையிலயே இருந்தீங்களா.. இல்ல சொந்த ஊர் எதுனாச்சிக்கும் போன�od friends. We woud do almost everything together, until he met Shawn See. This happened in

 
At 12:46 PM, July 26, 2006, Blogger Unknown said...

நன்றி நன்னு, உங்க நன்மனம் யாருக்குமே வராது!

ஜொள்ளுப்பாண்டிகளுக்காக நான் கவனித்து எழுதியது. மக்கள் சேவையே மகேசன் சேவை!

வாகனங்கள் அதிகமானால், சுடுகாடுகளும் எலும்பு முறிவு மருத்துவமனைகளும் தானே அதிகமாக வேண்டும்? அது என்னப்பா பல் மருத்துவர்கள் மட்டும்? உண்மையாகவே ஒரு ஏரியாவுக்கு ஒன்று (அது கூட இல்லாமல் இருந்தது) என இருந்த பல் மருத்துவர்கள், இப்போது தெருவுக்கு 4 என இருக்கிறார்கள். ஏனப்பா?

 
At 12:54 PM, July 26, 2006, Blogger துளசி கோபால் said...

இப்பவாவது பல்லைக் கவனிக்கறாங்களேன்னு சந்தோஷப்படுங்க.

ஆமாம். இன்னும் 'சென்னையில் என்னென்ன சாப்பிட்டீங்க'ன்னு சொல்லவேயில்லை?(-:

 
At 12:57 PM, July 26, 2006, Blogger Unknown said...

சிறப்புச் சென்னைக் கச்சேரி செய்ததற்கும் மீண்டும் வலை உலகில் வந்து சிக்கியதற்கும் வாழ்த்துக்கள் நண்பரே:)

 
At 1:06 PM, July 26, 2006, Blogger Prabu Raja said...

Doctorungala pathi kekkareengala?

Reservation pera solli seat increase pannittannga.. avlothan.

;)

 
At 1:15 PM, July 26, 2006, Blogger Unknown said...

அனானி

வூட்டுக்காரம்மாவும் பார்த்து ரசிச்சி என் கிட்டே சொன்னாங்க!

பல் மருத்துவர்கள் பற்றிய புதிரை யாராவது அவிழ்த்துவிடுங்களேன்?

அது என்ன அனானி, கடைசியில் இங்கிலீசு?

 
At 1:28 PM, July 26, 2006, Blogger Unknown said...

துளசியக்கா

அப்படித்தான் நானும் நினைக்கறேன். மக்களுக்கு விழிப்புணர்வு வந்துட்டது போல.

சென்னையில் எங்கே போனாலும் சாப்பிட்டது அதிகம் - இளநீர் மட்டுமே! இங்கே கிடைப்பது நன்றாக இருக்காது.

தேவ், உங்க அளவுக்கு கச்சேரி செய்ய முடியுமா என்ன? வரவேற்புக்கு நன்றி.

பிரபு, அணைந்து போன நெருப்புலே ஏனப்பா கிளறி விடறீங்க?

 
At 1:38 PM, July 26, 2006, Blogger யாத்ரீகன் said...

அனானி நாந்தான் :-( .... நெட்வர்க்கில் எதோ பிரச்சனை.. எங்கிருந்து அந்த ஆங்கில வரிகள் வந்ததென தெரியவில்லை..

 
At 1:39 PM, July 26, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் //
அப்படியா?.. குட் குட்.. (அதான் உங்க வீட்டம்மாவே ரசிச்சிருக்காங்களே.. நானும் நல்லா சொல்லலாம்)

// இப்போது நிறைய பேர் 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.//
நானும் அப்படி ஒரு அதிர்ஷ்டக் கட்டை தான் :(

//முன்பை விட நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் //
சரி, உங்களுக்கு எப்படிங்க தெரிஞ்சுது? ;)

//நான் இங்கு வந்ததும் அங்கே நல்ல மழையாம்! //
நல்லார் ஒருவர் உளறேல்.. (அதாவது.. இப்போ தான் நீங்க மறுபடி உளற ஆரம்பிச்சிருக்கீங்க- ஐ ஆம் சாரி, ப்ளாக்க ஆரம்பிச்சிருக்கீங்க.. அதான் ரியாக்ஷன் தெரியுது ;))

//வலைப்பூக்களில் இந்த விடுமுறையின் போது என்ன என்ன நடந்தது என //
படிச்சிட்டு வலைப்பூக்களில் இந்த மாதம்னு பதிவு போட்டீங்கன்னா உங்களை மாதிரி லீவ் விட்டு வந்தவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு தொகுப்பா இருக்கும் ;) [எப்படி, அடுத்த பதிவுக்கு ஐடியா ;) ]

 
At 1:42 PM, July 26, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆ..
இவ்வளவு சொல்லிட்டு மறந்துட்டேன் பாருங்க.. துவாவை மீண்டும் வலை பதிவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
என்னடா எல்லாரும் அமீரகத்தை இப்படி அம்போன்னு விட்டுட்டு போறீங்களேன்னு நேத்து தான் பினாத்தலார் கிட்ட கேட்டு கிட்டு இருந்தேன்..
நீங்களும் ஆசிப்பும் வந்துட்டீங்க..(பாவம் அமீரகம்).. அடுத்து புது மாப்பிள்ளைகள் நிலவு நண்பனும், துபாய் ராஜாவும் என்னவானாங்கன்னு பார்க்கணும்..

 
At 2:12 PM, July 26, 2006, Blogger Unknown said...

பொன்ஸ் - வாங்கம்மா வாங்க,

உங்களைப் போன்ற உழைப்பாளிகளால் தான் நாடு முன்னேறுகிறது (உண்மையாக சொன்னதாவும் எடுத்துக்கொள்ளலாம்).

பல் மருத்துவர்கள் - என்னுடைய கூரிய கவனிப்புத்திறன் தான் (அந்த அளவுக்கு அதிகம் பல் மருத்துவர்கள்).

//வலைப்பூக்களில் இந்த விடுமுறையின் போது என்ன என்ன நடந்தது என // இந்த மாதிரி யோசனை கொடுக்க உங்களை விட்டால் யார் இருக்கா?

மறந்து போகாமல் வாழ்த்தியதற்கு நன்றி!

 
At 4:32 PM, July 26, 2006, Blogger கதிர் said...

வாங்க வாங்க.
நீங்க வந்துட்டிங்க இப்பதான் ஒருத்தர் கிளம்பறார்.

//இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் (ஜொள்ளுப்பாண்டி கவனத்திற்கு!).//

இது என்னவோ பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கற மாதிரி இருக்கு.
:)

 
At 7:28 AM, July 27, 2006, Blogger Unknown said...

வாங்க தம்பி வாங்க,

பக்கத்து இலை பாயாசம் கேட்கிறதுலே உங்களுக்கு அனுபவம் அதிகம் போல. என்னைப்போல அடிக்கடி ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்தீர்கள் ஆனால், பாயாசம் என்ன, பக்கத்து இலைக்கு ஒரு விமானத்தையே கேட்டிருப்பீர்கள்.

 

Post a Comment

<< Home