2006/08/17

இரத்த தான முகாம் - 18 ஆகஸ்ட்

நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தது போல, துபாயின் 'சென்னை சேரிட்டி' குழு நடத்தும் இரத்த தான முகாம் நாளை காலை 10 மணிக்கு அல் வாசல் மருத்துவமனையில் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்களால் முடியாவிடில், தெரிந்தவர்களுக்கும் இச்செய்தியினைத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி!

2006/08/11

மின்சாரத்தை சேமியுங்கள்!

நமக்கு மின்சாரம் எவ்வளவு இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது என்பது, அது இல்லாமலிருக்கும் நேரத்தில் தான் தெரிகிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்?

இப்போதெல்லாம் ஆட்டுக்கல், அம்மி போன்ற பொருட்கள் பல வீடுகளில் இருப்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் அதை நமக்கு உபயோகப்படுத்தத் தெரியுமா? (ஆண்களுக்கும் சேர்த்துத் தான், பெண்களுக்கு மட்டுமே என எழுதினால், அதற்கு யாரும் சண்டைக்கு வரக்கூடாது பாருங்கள்?). குளிர் சாதனப்பெட்டிகள் இல்லாத வீடுகள் உண்டா?

இப்படி இன்றியமையாத மின்சாரத்தை நாம் பல வழிகளில் வீணாக்குகிறோம். யாரும் உபயோகப்படுத்தாத நேரத்திலும் பல மின்சாதனங்கள் தேவையில்லாமல் உபயோகத்தில் வைத்து மின்சாரம் வீணாக்கப்படுகிறது.

ஏறக்குறைய எல்லோர் வீட்டிலும் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் தான் அதிகமாக மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இது பலருக்குத் தெரிவதே இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?


இப்போது நீங்கள் வீட்டில் இருந்து இதைப்படிப்பதாக இருந்தால் உடனே நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நீங்களே சோதிக்கலாம்.

குளிர்சாதனப்பெட்டியினைத் திறந்து பாருங்கள். விளக்கு எரிந்து
கொண்டிருக்கும். யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு?


இதையெல்லாம் யாருமே கவனிப்பதில்லை. என்னமோ போங்க!

2006/08/09

உயிர்காக்க எட்டரை கோடி

உயிரின் விலை குறைந்து விட்டதா என்ற பதிவில், திரு. மனதின் ஓசை அவர்கள் இம்மாதிரி பாதசாரிகள் மரணம் நடப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா என கேட்டிருந்தார். அதற்கு இப்போது பதில் இப்போது கிடைத்திருக்கிறது.

அரசாங்கம் சுமார் 70 மில்லியன் திர்ராம் செலவு செய்து விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எல்லாம் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலத்தைக் கட்டப்போகிறது. இதனால் இம்மாதிரி விபத்துக்களால் இறக்கும் பாதசாரிகளின் விகிதம் சுமார் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டில் மட்டும் 23 பேர்கள் இம்மாதிரி இறந்து போயிருக்கிறார்கள் ஷேக் சாயது சாலையில் (மொத்தம் 100 பேர்கள் துபாய் முழுவதும்). துபாய் முழுவதும் 17 புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் கட்டப்போகிறார்கள்.

என்ன தான் புதிது புதிதாக பாலங்கள் கட்டப்பட்டாலும், அதை உபயோகப்படுத்தாமல் சட்டத்தை மீறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அதையும் தடுக்க சாலைகளின் நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்போகிறார்கள்.

அதையும் தாண்டிக்குதிக்காமல் இருந்தால் சரி.

2006/08/08

துபாயில் சுடும் சம்பவம்!

உலக நாடுகள் எங்கும் இப்படித்தான் ஒரு பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறது என்றால், துபாயிலுமா?

பாருங்கள், நேற்று இங்கு ஒரு வீட்டில் நடந்த சுடும் சம்பவத்தை. ஒரே ஒரு முறை சுட்டிருந்தாலும் பரவாயில்லை, இரண்டு முறை சுட்டிருக்கிறார்கள்.

பயன்படுத்திய ஆயுதங்களோ மிக சாதாரணமாக எல்லா இடத்திலும், ஏன் எல்லார் வீட்டிலும் கிடைப்பவைகளாம்.

இளகிய (?) உள்ளம் கொண்டவர்கள் இப்படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சம்பவம் நடந்தது வேறு எங்குமில்லை. எனது வீட்டில் தான்!


முதலில் சுட்டது






இரண்டாவதாக சுட்டது


பார்த்து விட்டு பரிதாபப்படுபவர்கள் தாராளமாக பரிதாபப்படலாம். ஏனெனில் இது நானே சுட்டது.

பார்த்து விட்டு திட்டுகிறவர்கள் தாராளமாக திட்டிவிட்டும் போகலாம்! அடிக்க வருபவர்கள் துபாய் குறுக்குச் சந்து முனையில் நாளை மதியம் 12.00 மணிக்கு 47° C வெயிலில் காத்திருக்கவும்

பி.கு.: தொடர்ந்து சில பதிவுகள் சீரியஸான பதிவுகளாக போய்விட்டதா? அதனால் தான். மூடு மாற்றுவதற்காக!

2006/08/01

நெஞ்சைப்பிழியும் சோகம்

இன்று துபாயின் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு செய்தி.

32 வயதான ஆரோக்கியசாமி என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவலாளி கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு கட்டுமானத் துறையைச் சார்ந்த அலுவலகத்தின் இயந்திரக்கிடங்கில் காவலாளியாக வேலையில் இருந்த போது, இயந்திரங்களத் திருட வந்த யாரோ இவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 6 வருடங்களாக இவர் இங்கு வேலை செய்து வருகிறாராம். அடுத்த மாதம் விடுமுறைக்குச் செல்வதாக ஆவலுடன் இருந்திருக்கிறார். பாவம். ஆனால், விடுமுறைக்குச் செல்ல மிக்க ஆவலுடன் எதற்காக இருந்திருக்கிறார் என கேட்கும் போது தான் மனம் வேதனைப்படுகிறது. தனது மனைவியையும், பிறந்தது முதல் பார்த்திராத தனது ஒரு வயது மகனையும் பார்க்க இருந்திருக்கிறார். இதைப்படிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, அவரது மனைவியின் நிலமை?

சமீபத்தில் பக்ரைனில் நடந்த தீ விபத்தில் இறந்த 16 பேரின் சோகக் கதை அணையும் முன், இப்படி இன்னுமொரு செய்தி.

கடல் கடந்து பெரும் கனவுகளுடன் வந்த இவர்களின் உயிர் இப்படி அனாவசியமாக போவது பரிதாபத்திற்குரியது.

அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு வேண்டிய பலத்தைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக!

2006/07/26

சொர்க்க வாசம் முடிந்தது!

சென்னைக்கு விடுமுறைக்குப் போவதாக சொல்லிவிட்டுத் தான் போனேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மொத்தமாக எனது மிகப்பெரிய நன்றி.

ஊருக்குப் போனானே, என்ன ஆனான் என ஒருத்தருக்குமே அக்கறை இல்லை. (வலைப்பூக்களில் இதெல்லாம் சகஜமப்பா என யாருப்பா அங்கே குரலு விடறது? மனசாட்சியா, சரி சரி!).

ஊருக்குப் போனது நமது 'இந்தியன்' விமானத்தில் தான். விமானம் நிறைய பேருடைய பயமுறுத்தல்களையும் மீறி, வெறும் 30 நிமிட தாமதத்திலேயே கிளம்பி விட்டது. ஏறும் போதும் இறங்கும் போதும், ஆட்டம் மிகவும் பலமாகவே இருந்தது (சிறிய A-320 விமானம் என்பதால்).

இன்னொரு முக்கியமான முன்னேற்றம் - விமானப்பணிபெண்கள். வழக்கமாக ஓய்வு பெறும் வயதில் இருக்கும் பணிப்பெண்களையே பார்க்கவேண்டி இருக்கும் இந்தியன் விமானத்தில், இப்போது சிறு வயதுப்பெண்கள் (ஜொள்ளுப்பாண்டி கவனத்திற்கு!).

சென்னையில் - சொர்க்கம் என நான் சொன்னாலும், அங்கே இருப்பவர்களுக்கு அது அப்படி தெரியவில்லை என்றே தோன்றுகிறது. எல்லாரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யாருக்கும் நேரமே இல்லை. முதலெல்லாம் 5 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது, இப்போது நிறைய பேர் 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.

ஊர் முழுவதும் கார்கள் அதிகமாகி இருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முன்பை விட நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் (காரணம் என்ன? தெரியவில்லை).

ஆட்டோ ஓட்டுநர்களிடம் மீட்டர் என்ற வார்த்தையைப்பற்றி கேட்க முடியாது - அவர்களும் மறந்து விட்டார்கள், மக்களும் கேட்பதில்லை. ஷேர் ஆட்டோ நன்றாக ஓடுகிறது (வசதியாகவும் இருக்கிறது). யாரைப்பார்த்தாலும் பெட்ரோல் விலையைப்பற்றித் தான் பெருமூச்சு விடுகிறார்கள் (ஆனாலும் வாகனங்கள் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை).

நிலம், வீடு, மனை - எதுவும் வாங்குவதாக இருந்தால் இப்போதே வாங்க வேண்டும். எல்லாம் டைனோசார் விலை போல இருக்கிறது (எத்தனை நாள் தான் யானை/குதிரை என சொல்லுவது?). காரணங்கள் பல சொல்கிறார்கள் - எது உண்மையென தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் - இங்கே இருக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க விடுமுறையில் போனால், ஜூன் / ஜூலை மாதத்தில் சென்னையும் 36 - 39° அடித்து கொளுத்தியது. என்னுடைய ராசி, நான் இங்கு வந்ததும் அங்கே நல்ல மழையாம்! நேரமப்பா நேரம்!

வலைப்பூக்களில் இந்த விடுமுறையின் போது என்ன என்ன நடந்தது என இன்னும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. மெதுவாகத் தான் படிக்க வேண்டும். காரணம், சென்னை இணையதள கணினிகளின் நிலைமை. அதில் தமிழ்மணத்தையும், தேன்கூட்டையும் பார்க்க முயன்று நொந்து போய் வந்துவிட்டேன். இணையதள மையங்களில் சிலர் அடையாள அட்டை கேட்கிறார்கள், பலர் கேட்பதில்லை. எப்படி இருந்தாலும், கணினிகளின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

பொதுவாக சென்னையில் பல மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகிறது - அதுவும் ஒரே வருட இடைவெளியில். சில நல்ல மாறுதல்கள், சில மற்றபடி. என்ன இருந்தாலும், சென்னை சென்னை தான்!


மீண்டும் வலைப்பூவில் வந்து இணைந்த மகிழ்வுடன்,
துபாய்வாசி

2006/06/21

சொர்கத்துக்குப் போகிறேன்!

வேறு ஒன்றுமில்லை - கோடை விடுமுறைக்காக சென்னைக்குப் போகிறேன். துபாய்வாசி கொஞ்ச நாள் சென்னைவாசியாக இருந்து விட்டு வருகிறேன்.

இராமராஜன் 'ஸ்டைலில்' சொல்லலாம் என்று தான் இத்தலைப்பு.

எத்தனையோ பிரச்சினைகள் - விமான நிலையத்தில் தொடங்கி, பேருந்தில் இடிபட்டு, ஆட்டோ ஓட்டுநர்களிடம் சண்டை போட்டு, இரங்கநாதன் தெருவில் நுழைய கஷ்டப்பட்டு, பின்னர் நுழைந்தபின் ஏண்டா நுழைந்தோம் என நினைத்து - என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? ஆயிரம் தான் இருந்தாலும்................. ஆயிரத்து ஒன்னு ஆகுமா?

சாத்தான் ஊருக்கு போறாரு, நிலவு நண்பன் ஊருக்கு போறாரு, நாம மட்டும் இங்கே என்ன செய்யறதுனு தான் நானும் கிளம்பிட்டதா நினைக்க வேண்டாம். எல்லாம் திட்டமிட்ட விடுமுறை தான். ( திட்டமிடாவிட்டால், இக்கோடைக்காலத்தில் விமானத்தில் இடமும் கிடைக்காது என்பது வேறு விஷயம்).

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் எழுதத்தான் போறீங்க. எழுதுங்க, ஆனா என் கிட்டே இருந்து பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்காதீங்க! அப்படியும் யாருக்காவது கிடைத்தால், அவர்கள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என் நினைத்துக்கொள்ளலாம் (இல்லை எனக்கு சென்னைக்குப் போயும் புத்திவரவில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம் அல்லது இவன் சென்னையில் இருந்தாலும் துபாயில் இருந்தாலும் தொந்தரவு மட்டும் நம்மை விடுவதில்லை எனவும் நினைத்துக்கொள்ளலாம்)).

வர்ர்ர்ர்ர்ட்டா?

எச்சரிக்கை: போயிட்டு வந்து அடிபட்ட, இடிபட்ட அனுபவம் ஏதாவது இருந்தால் எழுதுவேன்!