இன்று துபாயின் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு செய்தி.
32 வயதான ஆரோக்கியசாமி என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவலாளி கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு கட்டுமானத் துறையைச் சார்ந்த அலுவலகத்தின் இயந்திரக்கிடங்கில் காவலாளியாக வேலையில் இருந்த போது, இயந்திரங்களத் திருட வந்த யாரோ இவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 6 வருடங்களாக இவர் இங்கு வேலை செய்து வருகிறாராம். அடுத்த மாதம் விடுமுறைக்குச் செல்வதாக ஆவலுடன் இருந்திருக்கிறார். பாவம். ஆனால், விடுமுறைக்குச் செல்ல மிக்க ஆவலுடன் எதற்காக இருந்திருக்கிறார் என கேட்கும் போது தான் மனம் வேதனைப்படுகிறது. தனது மனைவியையும்,
பிறந்தது முதல் பார்த்திராத தனது ஒரு வயது மகனையும் பார்க்க இருந்திருக்கிறார். இதைப்படிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, அவரது மனைவியின் நிலமை?
சமீபத்தில் பக்ரைனில் நடந்த தீ விபத்தில் இறந்த 16 பேரின் சோகக் கதை அணையும் முன், இப்படி இன்னுமொரு செய்தி.
கடல் கடந்து பெரும் கனவுகளுடன் வந்த இவர்களின் உயிர் இப்படி அனாவசியமாக போவது பரிதாபத்திற்குரியது.
அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு வேண்டிய பலத்தைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக!