இன்று என் வாழ்விலே ஒரு மறக்க முடியாத நாள். கண்ணெதிரில் ஒரு உயிர் அனாவசியமாக பறி போனது. காரணம், அலட்சியம், ஏதும் நடக்காது என ஒரு பைத்தியக்காரத்தனமான அசட்டுத் தைரியம்.
ஷேக் சாயது சாலை இங்குள்ள ஒரு பெரும் நெடுஞசாலை. இது துபாயிலிருந்து அபுதாபிக்கு செல்ல உதவும் ஒரு மிகவும் பரபரப்பான சாலை. சுமார் 150 கி.மீ. தூரமான இச்சாலையில் பாத சாரிகள் யாரும் கடக்க அனுமதி இல்லை. வெறும் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. நடுநடுவே சிறு பாலங்கள் உள்ளன.
ஜெபல் அலி எனப்படும் துறைமுகம் இருக்கும் இடத்துக்கு வரை ஒரு 10 பாலங்கள் உள்ளன. இதுவும் வாகனங்கள் அடுத்த எதிர்பக்கத்துக்கு செல்ல மட்டுமே அன்றி, பாதசாரிகளுக்காக இல்லை. ஒருவேளை பாதசாரிகள் இச்சாலையை கடக்க வேண்டுமெனில், இப்பாலங்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும் - எந்த விபத்தும் வேண்டாமெனில்.
40 கி.மீ. தூரத்திற்கு ஒரு 10 பாலங்கள் என்றால், சராசரியாக 4 கி.மீ. க்கு ஒரு பாலம். எனவே, நீங்கள் நடுவில் இருந்தீர்கள் எனில், இவ்வளவு தூரம் நடந்து பாலத்தை அடைந்து பின்பு மறுபுறம் செல்ல குறைந்தது 30 நிமிடம் ஆகும் (அதுவும் கோடைக்காலங்களில் இந்த 30 நிமிடம்? சொல்லவே வேண்டாம்) .
இச்சாலை முழுவதும் ஏதாவது சாலை செப்பனிடும் பணியோ, அல்லது கட்டிடங்கள் கட்டும் பணியோ நடந்து கொண்டோ இருந்துகொண்டே இருக்கும். இப்பணியில் ஈடுபடும் எண்ணற்ற தொழிலாளர்கள் சாலையினை கடந்து கொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனையோ பேர்கள் உயிர்விட்டார்கள் என பத்திரிக்கைகளில் படிப்பது உண்டு. ஆனால், இந்த மாதிரி ஒரு சம்பவம் என் கண்ணெதிரில் நடக்கும் என நான் கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை.
இன்று காலை நான் அலுவலகத்திற்கு வழக்கம் போல எனது காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது 2 பேர் நட்டநடு சாலையில், இரண்டு வரிசை (Lane) நடுவே வாகனங்கள் சென்று விடுவதற்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்த்தேன்.
ஒவ்வொரு வரிசையாக இம்மாதிரியே முன்னேறி அவர்கள் 3ஆவது பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் இடைப்பட்ட வெள்ளைக்கோடுகளில் நின்று கொண்டிருந்தனர் இருவரும். தங்களைப்பார்த்துக் கொண்டே (திட்டிக்கொண்டே) செல்லும் கார்களைப்பார்த்து தனக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டும் இருந்தனர் அவர்கள். அவர்கள் இருப்பதைப் பார்த்து விட்ட எனக்கு முன் சென்ற காரும், பக்கத்து வரிசையில் வந்த காரும் மெதுவாக்கி விட்டோம்.
ஆனால்? கண்ணிமைக்கும் நேரத்தில், மூன்றாவது வரிசையில் இருந்து வந்தது ஒரு கார். அது, என் பக்கத்து வரிசையில் இருந்த காரையும் என்னுடைய காரையும் முந்திச் செல்ல (overtake) செய்ய முற்பட்டது. இதனால், அக்கார் ஓட்டுநருக்கு நடுச்சாலையில் நின்று கொண்டிருந்த இருவரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
120 கி.மீ. வேக வரையரை உள்ள அச்சாலையில், 140 கி.மீ வேகம் வரைதான் நிறைய பேர் செல்வார்கள். அப்படித்தான் இக்காரும் வந்தது - தப்பென்ற சத்தத்துடன் இவ்விருவரையும் தூக்கி அடித்தது! என் கண் முன்னால், ஒரு உடம்பு காற்றில் 6 அடி உயரத்தில் பறந்தது! எனக்கு ஒன்றும் புரியவில்லை - ஆனால், அவ்விபத்தினை தவிர்க்க தன்னிச்சையாக என் கை காரை பக்கத்து வரிசைக்குத் திருப்பியது. என் அதிர்ஷ்டம் - பக்கத்து வரிசையில் யாரும் வரவில்லை.
இக்களேபரத்திலிருந்து எப்படித்தான் தப்பித்தேனோ எனக்கே தெரியவில்லை. கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடைய கார் மீது இரத்தத்துளிகள் நடந்த விபத்தின் கோரத்தையும் மயிரிழையில் நான் தப்பியதையும் நினைவு படுத்தின!
உயிரின் மதிப்பு என்ன அவ்வளவு குறைந்து விட்டதா? இறந்து போன அவரை நம்பி அவரது வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ? என்னென்ன கனவுகளுடன் அவரது மனைவி/பிள்ளைகள்/பெற்றோர் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? எவ்வளவு கடன் பட்டிருக்கிறாரோ இங்கு வந்து வேலையில் சேர? இனி அவர் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு?
இம்மாதிரி விபத்துக்கள் நடக்கக் காரணம் என்ன? பொதுவாக இவர்களுக்கு ஒரு அலட்சியமா அல்லது இவர்களை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகளா? இவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் சாலையின் ஒரு பக்கமே தான் வரும் அல்லது இறக்கிவிடும். இவர்களாக மற்றொரு பக்கத்திற்கு சாலையைக் கடந்து செல்ல முற்படும்போது இவ்வாறு நடப்பதாக சொல்கிறார்கள். இன்று நடந்தது இவர்கள் மறுபக்கத்திலிருந்த டீகடைக்கு செல்ல முற்பட்டிருப்பார்கள் - என நான் நினைக்கிறேன்.
அரசாங்கம் இவ்வாறு நடப்பதை தவிர்க்க 150 கி.மீ. தூரத்திற்கும் சாலை நடுவில் கம்பிச்சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறது (இன்றைய விபத்துப் பகுதியில் இன்னும் கட்டப்படவில்லை). அப்படியே கம்பிச்சுவர் கட்டினாலும், அதைத் தாண்டிக்குதித்து போக இவர்கள் முற்படமாட்டார்கள் என்பதும் நிச்சயமில்லை!
ஒரு அதிவேக சாலையில் கடக்க முற்பட்டால் என்னவாகும் என ஒரு பகுத்தறிவு கூட இல்லாமல், இப்படி ஒரு விலைமதிப்பற்ற உயிர் வீணாக போனது என் மனத்தை மிகவும் பாதித்திருக்கிறது. இதில் மீண்டு வர எத்தனை நாள் ஆகும் என தெரியவில்லை!
இறந்து போன அந்நபரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர இப்போதைக்கு செய்ய ஒன்றுமில்லை.