துபாய்வாசியின் இடுகைகள்
எனக்கும் எல்லோரையும் பார்த்து, இந்த விபரீத ஆசை. எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதப்படும் இங்கே!
2006/03/26
2006/03/22
இன்றைய தத்துவம்!
எத்தனையோ பேர்களின் வழியில்..........
1.) பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்,
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்,
ஆனா பன மரத்துல பணம் இருக்காது.........
2.) சனி - ஞாயிறு -> ஒரு நாள்,
ஆனா, ஞாயிறு - சனி?
3.) சைக்கிள்லே போனா சைக்கிளிங்,
டிரெயின்லே போனா டிரெயினிங்கா?
4.) என்ன தான் ஏரோப்ளேன் மேல பரந்தாலும்...
பெட்ரோல் போட கீழதான் வரனும்.
5.) மெக்கானிகல் எஞ்ஜினியர் மெக்கானிக் ஆகலாம் ஆனா
சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் சாஃப்ட்வேர் ஆக முடியாது......
2006/03/21
அதிதி தேவோ பவ!
அதிதி தேவோ பவ - இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? விருந்தினர் அனைவரும் கடவுளுக்கு சமம் என்பது பொருள். இதுவே நமது இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் புது விளம்பரத்தின் தாரக மந்திரம்.
இப்போது வரும் புது விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? யாராவது ஒரு வெளிநாட்டுப் பயணி, ஒரு ஏஜென்ட்டால் தொந்தரவு செய்யப்படுவது போலவும், இந்தியக் குடிமகன் ஒருவர் அவருக்கு உதவுவது போலவும் இந்த விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. இத்தனை நாட்கள் இவர்கள் தூங்கி விட்டு, இப்போதாவது விழித்துக்கொண்டார்களே எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு சுற்றுலாத்தளங்களிலும் சுற்றுலாப்பயணிகள் படும் அவதிகள் சொல்லி மாளாது.
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் பாடு, அவர்களை மறுபடியும் இந்தியாவிற்கு வர வைக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி.
இந்த மாதிரி, வெறும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே தொந்தரவு என்பது உண்மையல்ல என்பது ஏதாவது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்திற்கு சென்ற அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மாதிரி பாகுபாடுகள் தான் நமது சில்லறை ஏஜென்டுகளுக்கு கிடையாதே?
ஏஜென்டுகள் மட்டுமா? ஆட்டோ ஓட்டுனர்கள், வாடகைக்கார் ஓட்டுனர்கள், விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் என எத்தனையோ பேர் இந்த மாதிரி தொல்லை கொடுப்பவர்களில் அடக்கம்.
ஒருமுறை ஊட்டிக்கு பயணம் செய்த போது, நான் பதிவு செய்த விடுதியில் இருந்து வண்டி அனுப்பவதாக சொல்லியிருந்தார்கள் - ஆனால், அனுப்பவில்லை. எனவே வெளியே வந்து அவர்களுக்கு தொலைபேசியில் விவரம் சொல்லிக் காத்திருந்தபோது, ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்னை அணுகினார். அவரிடம் எனக்கு ஆட்டோ வேண்டாம் எனவும், விடுதியின் வண்டிக்காக காத்திருப்பதாகவும் பணிவுடன் சொன்னேன்.
அதற்கு அவர், அந்த விடுதி (Sterling Resorts!) கண்டிப்பாக வண்டி அனுப்பது எனவும் காத்திருப்பது வீண் எனவும் 'வாழ்த்துரை' வழங்கினார். நான் சொன்னேன் - அவ்வாறு வரவில்லையெனில், நான் நடந்தே செல்வேன், கண்டிப்பாக அவரது ஆட்டோவில் ஏற மாட்டேன் என்று. 10 நிமிடத்திற்குள்ளாக அந்த வண்டி வந்தது. அவரது வாழ்த்துரை பலிக்கவும் இல்லை, அவரது கணிப்பு ஒரு உண்மையுமில்லை!
இந்த மாதிரி ஒவ்வொருவரும் ஏதாவது விதத்தில் ஒரு கசப்பான அனுபவம் இருக்கும். இந்திய சுற்றுலாத்துறை இந்த மாதிரி ஏஜென்டுகளை மற்றும் குறி வைக்காமல், இந்தியர் அனைவருடைய மனநிலையில் மாற்றம் வரவைக்கவேண்டும். அப்படி செய்தால், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் எந்த வித தடையுமின்றி அடிக்கடி இந்தியா வருவார்கள்.
பார்க்கலாம் இந்த விளம்பரங்கள் எத்தனை தூரம் இந்தியர்களை சென்றடைகின்றன என்று!
2006/03/20
பாகிஸ்தான் மாறுகிறதா?
காமன்வெல்த் போட்டிகள் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதில் நீச்சல் போட்டிகளில் பாகிஸ்தான் நாட்டு வீராங்கனைகள் கலந்து கொள்வதாக (முதல் சுற்றுகளில்) பார்த்த போது, பெரிதும் ஆச்சரியம் அடைந்தேன்.
ஆக்கி போட்டிகளிலேயே அரைப்பாவாடை அணிய வேண்டியிருப்பதால், பெண்கள் அப்போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என சொல்லிய நாடா, நீச்சல் போட்டியில் தனது நாட்டுப் பெண்களைக் கலந்து கொள்ள அனுமதிதது? இது தான் எனது ஆச்சரியம்.
சரி அனுமதித்தது உடல் தெரியாத முழு நீச்சல் உடை அணி தான் அணிய வேண்டும் என்பது போன்ற சில விதிமுறைகளுக்குட்பட்டதாகத்தான் இருக்கும் என நினைத்தேன். போட்டியில் கலந்து கொள்ளவந்த வீராங்கனையைப் பார்த்ததும் இன்னும் ஆச்சரியம்! பொதுவாக அனைவரும் அணியும் முதுகு தெரியுமாறு உள்ள உடையையே அவர் அணிந்து போட்டியில் கலந்து கொண்டார் (பெயர் - கிரன் கான்). ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், முழு உடல் மறைக்கும் உடையை அணிந்து பங்கு பெற்றது வேறு விஷயம்.
பாகிஸ்தானின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே! காரணம் எதுவென்று தெரியவில்லை - எதுவாக இருப்பினும், பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பி.கு.: கலந்து கொண்ட 2 வீராங்கனைகளுமே, கடைசியாகத் தான் வந்தார்கள். அடுத்த போட்டியில் முன்னேற்றம் இருக்குமென நம்புவோமாக!
2006/03/15
சிவாஜி படத்திலிருந்து 'ஷ்ரேயா' நீக்கமா?
ஷார்ஜா நட்சத்திரக் கிரிக்கெட்டின் எதிரொலி
(நமது சிறப்பு நிருபர் ஐடியா ஐயாச்சாமியின் சிறப்பு தொகுப்பு!).
கடந்த வாரம் தெலுங்குப்பட உலக சினிமா நட்சத்திரங்களுக்கும், தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்தப்போட்டியில் தெலுங்கு நட்சத்திரங்களே வெற்றி பெற்றனர். இந்தப்போட்டியினால், பல சுவையான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை பற்றிய சிறப்புத்தொகுப்பு:
முதல் சுவையான விஷயம் - சிவாஜி பட நாயகி ஷ்ரேயா பற்றியது. அவர் தற்போது தமிழ் படத்தில், அதுவும் சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறார். ஆனால் போட்டி நடந்த போது, அவர் முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர் இனிமேல் எந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது 'தமிழ்' சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ரஜினி இதற்கு இணங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஞ்ஜலா நிவாரண நிதி
இந்தப்போட்டியை காண வந்த மும்பை நடிகை ஏஞ்ஜலா (உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் பிரபு தேவாவுடன் நடித்தவர்), அவரது ஏழ்மை நிலையை பிரதிபலிக்கும்படி உடை அணிந்து வந்திருந்தைக் கண்ட ஷார்ஜா வாழ் மக்கள், அவர்து 'உடை' நிதிக்காக ஒரு இயக்கத்தினை துவக்கியுள்ளார்கள்.
அவரது ஏழ்மையை அனைவரும் பார்க்க வேண்டும் என, ஏஞ்ஜலா மைதானத்தை சுற்றி சுற்றி வந்தார். இதனால், பலர் கண்ணீர் விட்டனர். விட்ட கண்ணீர் ஆறாகப் பெருகி ஆட்ட மைதானத்தை நனைத்ததால், ஆட்டம் சில நிமிடங்களுகு தடைபெறுமோ என அஞ்சி, போட்டி நடத்தியவர்கள் ஏஞ்ஜலாவை ஒரே இடத்தில் அமர செய்தனர்.
ஜெயா டிவியின் மற்றுமொரு சாதனை
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள், சுமார் ஒரு அணிக்கு மூன்றரை மணி நேரம் வீதமாக, ஏழரை மணி நேரம் நடக்கும் (உணவு இடைவேளையையும் உட்பட) என்பது அனைவரும் அறிந்தே. ஆனால் 30 ஓவர்களே கொண்ட இந்த நட்சத்திர போட்டியை, சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக 'ஒளி பரப்பி' ஜெயா டிவி சாதனை படைத்துள்ளது.
இடையில் ஜெயா டிவியின் செய்திகள், இரவு 7.30 மணிக்கு இருந்ததால், ஒரு 30 நிமிட நேரடி ஒளிபரப்பை பார்க்க இயலாது என (துபாய்வாசி போன்ற) ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், ஜெயா டிவியின் தொழில்நுட்பத்தால், விட்ட இடத்திலிருந்தே 'நேரடியாக' இந்த ஆட்டம் ஒளிபரப்பானது.
தூர்தர்ஷன் இந்தத் தொழில்நுட்பத்தின் ரகசியத்தினை, ஜெயா டிவியிடமிருந்து அறிய மிகவும் ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் தான் தான் ஆட்டங்களிடையே விளம்பரங்களை செருகுவதில் முடிசூடா மன்னன் என நினைத்திருந்ததை, ஜெயா டிவி விளம்பரங்களிடையே ஆட்டத்தினை ஒளிபரப்பி அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே, இந்த தொழில்நுட்பத்தினை தூர்தர்ஷனுக்கு வழங்க முடியும் என ஜெயா டிவி நிறுவனம் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நமது சிறப்பு நிருபர்
ஐடியா ஐயாச்சாமி
2006/03/08
2006/03/07
எனக்குப் புரியவில்லை!
சென்ற முறை நான் சென்னை சென்றிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி, என் மனதை மிகவும் வருந்தச் செய்தது.
சமீப காலங்களில், சென்னை செல்லும்போதெல்லாம் பேருந்துப்பயணம் மிகவும் சில தான். காரணம் போக வேண்டிய தூரம் அவ்வளவு இல்லை அல்லது போய் வருவதற்கு ஒரு வாகனம் இருந்தது. இந்தத் தடவை வாகனம் இல்லாத காரணத்தால், மற்றும் போரூர் வரை போக வேண்டியிருந்ததாலும், பேருந்தே சரியென்று போயிருந்தேன்.
சென்னை கூட்டம் எனக்கு ஒன்றும் புதியதல்ல. பள்ளிக்கும், கல்லூரிக்கும் - ஏன் வேலைக்கும் கூட பேருந்து ஒன்றே உபயோகித்து வந்தவன் நான். கூட்டம் பழகியது தான் என்றாலும், சமீப காலமாக அது அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது என எல்லாருக்கும் தெரியும். எனக்கும் அது தெரிந்தே இருந்தது.
குறிப்பாக போரூரின் வழித்தடம் மிகக் கூட்டமான ஒன்று என்று நினைக்கிறேன். வரும்போதும் போகும்போதும் கூட்டத்திற்கு ஒரு வித்தியாசமுமில்லை. இத்தனைக்கும் நேரம் காலை 10 மணிதான். கூட்டமில்லா பேருந்திற்காக காத்திருப்பதாக இருந்தால், அன்றே வீடு போய் சேரமுடியாது என்பதால், வந்த ஒரு பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு எறினேன்.
நமது சென்னையில், கடைசி வரிசை மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் நான் ஏறிய போது, அதில் ஆண்கள் தான் உட்கார்ந்திருந்தனர். அதில் குறிப்பிடத்தக்க இருவர் - வயது 25 கூட இருக்காது. ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் போலத் தோற்றமளித்தனர். இந்தக்காலத்து 'வயசுப் பசங்க' என நாம் நினைக்கும் எல்லாத் தகுதிகளும் அவர்களுக்கு இருந்தது. அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் ஒரு குழந்தையுடனும், ஒருவர் வயதானவராகவும் இருந்தனர். எனக்கு இடம் கிடைக்கவில்லை.
பேருந்து விருகம்பாக்கம் வந்தடைந்தது. நிறைய பெண்மணிகள் ஏறினர். அவர்களுக்கே உரிய பழக்கமான ஏறிய பின் முன்னே செல்லாமல், பின் வரிசையை நோக்கி வந்தனர். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களில் எவரும் எழுந்து இடமளிப்பதாகத் தெரியவில்லை.
புதிதாக ஏறிய அம்மணி ஒருவர், மெதுவாக புலம்ப ஆரம்பித்தார். 'இவனுங்க எல்லாம் இடம் கேட்டாக்கூட கொடுக்க மாட்டானுங்க' என்று. அதைக் கேட்ட அந்தப் பெரியவர், எழுந்து இடத்தை அளித்தார். அவர் எழுந்திருக்கவே, அவரது பக்கத்தில் இருந்த மற்றொருவரும் எழுந்திருக்க வேண்டியதாகியது.
அடுத்த நிறுத்தம் வந்தது. இன்னும் பல பெண்கள் ஏறினர். இப்போது ஏறிய பெண்களில் ஒரு குடும்பம் அடக்கம். வயதான ஒரு பெண் மற்றும் கைக்குழந்தையுடன் ஒரு பெண் என இருந்த அவர்கள் உட்கார இடமளிக்குமாறு கேட்டனர். நமது வாலிபர்கள், எழுந்திருக்கவில்லை - மற்றவர்கள் எழுந்திருந்தனர். அதனால் காலியான இடத்தில், இருவரும் நகர்ந்து கொண்டு (பேருந்தின் வலது ஓர ஜன்னல் பக்கம்) வசதியாக அமர்ந்து கொண்டனர்.
குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தவரும் எழுந்திருக்க பார்த்தார், ஆனால் அவரை உட்கார சொல்லிவிட்டு பெண்கள் அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டனர். குழந்தையை வைத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அந்த வயதான பெண்மணிக்கு இடம் கிடைக்கவில்லை.
அடுத்த நிறுத்தமும் வந்தது - இன்னும் கூட்டமும் கூடத்தான். கூட்டத்தில் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. பேருந்து ஆடும் ஆட்டத்திலும் அது இருந்த நிலையுலும் - சொல்லவே வேண்டாம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த வயதான அம்மா, வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார். அந்தப் பையன்களோ எதுவுமே கேட்காதது போல தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் அனைவரும் சேர்ந்து சத்தமே போட ஆரம்பித்து விட்டனர். இவர்களோ அசருவதாக இல்லை.
நடத்துனரும் தன் பங்குக்கு தனது இருக்கையிலிருந்து குரல் கொடுத்தார். ஒன்றும் உபயோகமில்லை. வடபழனி நிறுத்தம் வந்தவுடன், அந்த இருவரில் ஒருவன் மட்டும் எழுந்தான். அந்த வயதான அம்மா அமர்ந்துகொண்டார். இன்னொருவனோ, ஒன்றுமே நடக்காதது போல அப்படியே இருந்தான்.
வடபழனி கமலா தியேட்டர் வந்தவுடன் தான் அவன் எழுந்தான் - ஏன் தெரியுமா? அடுத்த சிக்னலில் இறங்கிக் கொள்ள. இல்லையெனில்?
முன்பெல்லாம், நான் சென்னையில் பேருந்துகளில் பயணித்த போதெல்லாம், பெண்கள் வந்தால் தானாகவே ஏறக்குறைய அனைவரும் (சில சமயம் ஆண்கள் இருக்கையாக இருப்பினும் கூட) எழுந்து இடமளித்தனர். இப்போதெல்லாம் அந்த மாதிரி எதிர்பார்க்கக் கூடாதோ?
அந்த வாலிபர்கள் இருவரும் பயணிக்க வேண்டிய தூரம் மிகக் குறைவே. 4 நிறுத்தங்கள் தான். அந்தத் தூரத்திற்கு அவர்களால் நின்று பயணிக்க முடியவில்லை. ஒருவேளை அவர்கள் இரவுப்பணி செய்துவிட்டு வருபவர்களாக இருந்தால் கூட, பெண்கள் (அதுவும் குழந்தையுடன் / வயதான பெண் வேறு) கெஞ்சிக்கேட்ட பின்னும் அவர்கள் எழுந்திருக்காதது மிகவும் வருத்தப்பட வைத்தது.
இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இந்த 'வயசுப்பசங்க' கொடுப்பதில்லை என்பது தான் எனக்குத் தோன்றிய ஒன்று. இதற்கு யார் காரணம்? பெண்களும் ஒரு காரணமா என எனக்குப் புரியவில்லை. சென்னையில் இருந்து வந்து 7 வருடமாகி விட்டபடியால், இதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை.
என்னுடைய பெண் உறவினர் ஒருவரிடம் இந்த நிகழ்வைச் சொல்லியபோது, இப்போதெல்லாம் இப்படித்தான் என வெகு சாதாரணமாக சொன்னார். அவர்களுக்கெல்லாம் பழகி விட்டது. எனக்குத் தான் இது மிக புதிது!
இதற்கெல்லாம் யார் காரணம்? அனைவரும் 'வெறும்' சுயநலவாதிகளாக மாறி விட்டனரா? அல்லது இந்த 'எதிர்கால' சந்ததி தான் இப்படி அடிப்படை குணங்கள் இல்லாமல் மாறிக்கொண்டிருக்கிறதா?
எனக்குப் புரியவில்லை!
2006/03/02
புஷ் - கருணாநிதி சந்திப்பு
சென்னை, இந்தியா, ஆசியா, உலகம்: தற்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர், இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு பேச வெறும் ஒரு ரூபாய் என்ற திட்டத்தினைக் கேள்விப்பட்டார். இதனால் பெரிதும் ஆச்சரியப்பட்ட அவர், இந்தத் திட்டத்திற்கு பின்னே யார் இருக்கிறார் என்பதை அறிய மிகவும் ஆசைப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர் தயாநிதி மாறனை அறிமுகம் செய்துவைத்தார்.
அதிபரை தனியாக சந்தித்த தயாநிதி மாறனிடம், இந்த மகத்தான திட்டத்தினை அமெரிக்காவிலும் செயல்படுத்த வேண்டி இருப்பதால், அதன் ரகசியம் என்னவென்று புஷ் கேட்டதாகவும், அந்தத் தொழில்நுட்பத்தினைத் சொல்லித்தர வேண்டுமென்றால், தனது தாத்தா திரு. கருணாநிதியை புஷ் சந்தித்து ஆக வேண்டும் என மாறன் அன்பாக 'கேட்டுக்கொண்டதாக' தெரிகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி, புஷ் இந்த சந்திப்பிற்கு சம்மதித்தார்.
கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த புஷ்'க்கு மாலை முரசு, தமிழ்முரசு மற்றும் தினகரன் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தா அளித்து மகிழ்ந்தார்.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களை சந்தித்த கலைஞரிடம் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற கேள்விக்கு, தேர்தல் கூட்டணி வைப்பது எப்படி என்று புஷ் கேட்டதாகவும் அதைப்பற்றியே பேச்சு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரை ஏன் புஷ் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, மாறன் அவர்கள் அது அதிபரின் பாதுகாபு அதிகாரிகள் பொருத்த விஷயம், ஏனெனில் அங்கு செல்வது புஷ்ஷிற்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் தெரிவித்ததாக அவர் நிருபர்களிடம் சொன்னார்.
நமது நிருபர் ஐடியா ஐயாச்சாமி
(கற்பனைச் செய்தி!)