2006/05/23

யாரும் முந்திக்கொள்வதற்கு முன்!


இப்போதைய தமிழ் வலைப்பூ நிலவரத்திற்கு ஏற்றபடி, இந்தப்பதிவு!


நாய் பற்றிய பதிவுகள், செருப்பு பற்றிய பதிவுகள், ஏன் 'கழிவறை' பற்றி எழுதப்பட்ட பதிவு கூட வந்து விட்டது. அடுத்தது கீழே உள்ளவர்களைப்பற்றி யாராவது எழுதுவதற்கு முன், அவர்களது படத்தினை போட்டு வைக்கலாம் என்று தான்....






ஹா ஹா ஹா ஹா ஹா

2006/05/10

புத்தியா சிங் - தொடரும் சர்ச்சைகள்

இதற்கு முன்பு புத்தியா சிங்கைப் பற்றி எழுதிய பதிவு இதோ. யாரவது ஒருவர் சற்றே புகழ் அடந்து விட்டால், அவரைச் சுற்றிய சர்ச்சகைகளுக்கும் குறைவில்லை என்பது மறுபடி நிரூபணமாகியுள்ளது. (உலக அளவில், சமீபத்தில் ஷேன் வார்னே).

புத்தியா சிங்கை அவன் வயதுக்கு மீறிய ஓட்டங்களை ஓட வைத்து கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகள் நல சங்கம் ஒன்று புகார் கூற, ஒரிசா அரசாங்கம் அச்சிறுவனை சோதனைக்குள்ளாக்கியது. முதல் கட்ட சோதனையை முடித்த மருத்துவர்கள், புத்தியாவிற்கு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் (அதிக இரத்த அழுத்தம், அதிக யூரிக் அமிலம் அளவு போன்ற), அது பின்னாளில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனவும் அறிக்கையை விடுத்தார்கள். இதனால், புத்தியா இனிமேல் இந்த மாதிரி மராத்தான்களில் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதிக்கவேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதை கடுமையாக எதிர்த்த அவரது பாதுகாப்பாளர் மற்றும் பயிற்சியாளரான பிரஞ்சா தாஸ் இதெல்லாம் தவறானது என்றும், எத்தனையோ குழந்தைகள் பசி பட்டினியுடன் இருக்கும் போது அவர்களையெல்லாம் கவனிக்காமல், புத்தியாவிற்கு மட்டும் அக்கறை காட்டும் அத்தொண்டு நிறுவனத்தில் மேல் வழக்குப் போடப்போவதாகவும் அறிவித்தார். மேலும் காவல் துறை புத்தியாவை வலுக்கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதனால் பாதிக்கப்பட்டிருந்த புத்தியாவின் இரத்த அழுத்தம் எப்படி சாதரணமாக இருக்க முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.

இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவும் தன் பங்குக்கு கொஞ்சம் சொல்லியிருக்கிறார். புத்தியா மிகவும் சிறிய வயதாக இருப்பதால் அவன் இப்படி அதிக் தூரம் ஓடுவது தவறு என்றும், அவனுக்குள் இருக்கும் திறமையை முறையான பயிற்சியில் ஈடுபடுத்துவதே நல்லது என்றும் தெரிவித்தார். மில்கா சிங் கூட கருத்துத் தெரிவித்திருப்பதாக தெரிகிறது (என்னவென்று சரியாகத் தெரியவில்லை).

இச்சர்ச்சையோ இன்று ஒரு புதிய திருப்பத்தை எடுத்தது. புத்தியாவை பரிசோத்தித்த ஒரு தனியார்த்துறை இதய மருத்துவர், அரசாங்க அறிக்கை தவறு என மறுத்துள்ளார். பி.கே. பிரதான் எனும் இவர், இரண்டரை மணி நேரம் புத்தியாவை பரிசோதித்த பின், முன்பு அரசாங்கக்குழு அறிவித்தது போல எந்த ஒரு பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார். அரசாங்க மருத்துவர் குழு அளித்த அறிக்கை மிகவும் அவசரமான ஒன்று என்றும், விஞ்சானப்பூர்வமற்றது எனவும் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்ல! அவனது ஓட்டத்தில் பங்கெடுத்துள்ள CRPF மீதும் ஒரு விசாரணை நடக்கிறது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு துறை, இந்த ஓட்டத்தில் ஏன், எப்படி பங்கேற்கலாம் என கேள்வி.

இதன் நடுவில் ஒரிசாவின் தொலைக்காட்சிகளோ, புத்தியா பங்கெடுக்கும் ஒரு பாட்டு ஒன்றை ஒளிபரப்பி அவனை ஒரு நாயகனாக்கி விட்டது (அவனது கையில் தேசியக்கொடியுடனாம்).

அரசாங்கமும் ‘வழக்கம் போல’ எந்த ஒரு முடிவிற்கும் வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. தனது முடிவை தள்ளி வைப்பதாக அறிவித்திருக்கிறார்கள் இப்போது.

எது எப்படியோ, புத்தியாவை வைத்து அனைவரும் 'விளையாடுகிறார்கள்' என்பது மட்டும் தெளிவாகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம், புத்தியாவிற்குள்ளே ஒரு அசாதாரணமான திறமை ஒளிந்திருக்கிறது. அவனது பயிற்சியாளர் அதைக்கண்டு பிடித்ததால் அதை வைத்து அவர் 'வாழ்க்கையை' ஓட்ட நினைக்கிறார். அதற்கு யாரும் தடையாக வந்துவிடுவார்களோ என பயந்து தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஏதாவது சொல்லி மறுக்கிறார். ஒரு ஜூடோ பயிற்சியாளரான இவர் எப்படி புத்தியாவை வருங்காலத்தில் மராத்தான் போட்டிக்கு தயார்படுத்த முடியும்? இது வரை அச்சிறுவன் ஓடியது முற்றிலும் அவனது திறமையால் தானே தவிர, கண்டிப்பாக இவரது பயிற்சியால் மட்டுமே அல்ல என நினைக்கிறேன்.

புத்தியாவின் மீது 'திடீர்' அக்கறை காட்டும் தொண்டு நிறுவனம், ஒரிசா அரசாங்கத்தையோ அல்லது அதன் அனுமதியுடனோ தானே அவனை தத்து எடுத்து அவனது திறமையை முறையான பயிற்சியில் ஈடுபடுத்தி வளர்க்கலாம்.

இப்படி செய்தால், ஒவ்வொரு முறையும் வெறுங்கையுடன் திரும்ப வரும் ஒலிம்பிக் போட்டியில் வருங்காலத்தில் தங்கத்துடன் புத்தியா சிங் திரும்புவான் என கண்டிப்பாக கூறலாம். செய்வார்களா?

2006/05/09

வெற்றியா? தோல்வியா?

ஒரு நடுநிலை ‘வியாதியாக’ இருப்பவனும் என்னைப்போலவே யோசித்திருப்பான் என நினைத்து எழுதும் பதிவு. இந்த ‘அரிசியலில்’ எல்லாம் எனக்கு அவ்வளவாக ஞானம் இல்லாவிட்டாலும் ஏதோ எனக்குப் பட்டதை முதல்முதலாக எழுதுகிறேன்.

திரு. கருணாநிதியை எனக்குப் பிடிக்காவிடினும் (காரணம் எல்லாம் தெரியாது) அவரது பழுத்த அரசியல் அனுபவத்திலும், வார்த்தை ஜாலத்தாலும் கவரப்பட்டவன் நான். ஆனால் அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதை - கலர் டி.வி.யால் கொஞ்சநஞ்சமும் இல்லாமல் காணாமல் போய் விட்டது. 2 ரூ. அரிசி வேண்டுமானாலும் ஏழை மக்களுக்கு நேரடியாக உதவும் என சொன்னாலும், டி.வி. என்பது நிறைய பேருக்கு பிடிக்காமல் போனது.

அப்போது கணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், ஜெ. அவர்களே முன்னிலையில் இருந்தார்கள். நிறைய பேர் அவரே மறுபடி ஜெயிப்பார் எனவும் நினைத்தார்கள். போன தடவை மேற்கொண்ட தனி மனித தாக்குதல் பிரசாரங்கள் எல்லாம் இல்லாமல், ஜெ. முன்வைத்த அரசின் சாதனைப் பிரச்சாரங்கள் நன்றாகவே எடுபட்டிருந்தாற்போலத் தான் இருந்தது. ஆனால்?

யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போல, இவரும் இலவசங்களை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியது தான் யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த மக்களை பாதித்தது என நினைக்கிறேன்.

இந்த இலவசங்களின் அறிவிப்பிற்குப் பிறகு நடந்த கருத்துக் கணிப்பில், நிலைமை தலைகீழாக மாறியது. அது மட்டுமல்லாமல், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பும் இம்மாற்றத்தையே காட்டுகிறது.

அதுவரை கலர் டி.வி.யைப் பற்றியும், அரிசியைப் பற்றியும் குறை சொல்லி வந்த வை.கோ. அடித்த பல்டி ஒரு முக்கிய காரணம் என்றாலும் மிகையாகாது. இம்மாதிரியான கொள்கை நிலைப்பாடு மாற்றங்களே இவர்களை தி.மு.க. பக்கம் சாய்த்து விட்டது என்றே சொல்லலாம்.

இது எனக்குத்தோன்றிய 'அரிசியல்' அலசல். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2006/05/04

கிரிக்கெட்டின் சிறந்த 'சண்டைகள்'

கிரிக்கெட் மைதானத்தில், ஆட்டத்தை விட சுவாரசியமான எத்தனையோ விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முதலாவதாக குறிப்பிட வேண்டியது 'வார்த்தை சண்டைகள்' (SLEDGING, as they call it).

எல்லா விளையாட்டிலும் இம்மாதிரியான வார்த்தைகள் உபயோகப்படுத்தப் பட்டாலும், கிரிக்கெட்டில் தான் இந்த வார்த்தை சண்டைகளைப்பற்றி நிறைய குறையாக பேசப்படுகிறது. ஏனெனில் இது 'உத்தமர்களின்' (Gentleman’s Game) ஆட்டமல்லவா? அதில் போய் இப்படி எல்லாம் அடித்துக்கொள்வது தவறு என நினைக்கிறார்கள் போலும்.

ஆனால் இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இதை மிகவும் உபயோகப்படுத்துபவர்கள் இது 'உத்தமர்களின் விளையாட்டு' என சொல்லிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும், ஆஸ்திரேலியர்களும் தான். மற்ற நாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தாமல் இல்லை. நமது வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் இதில் சளைத்தவர்கள் அல்லர் என்பது போட்டிகளைப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்பதிவு, நமது இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சில சுவையான நிகழ்வுகளைப்பற்றியது.



வெங்கடேஷ் பிரசாத் & ஆமிர் ஷோகெய்ல் - உலகக்கோப்பை, பெங்களூர்.

இந்தியாவின் 287/8 என்ற இலக்கை குறிவைத்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், ஆமிர் ஷோகெய்ல் மற்றும் சயீத் அன்வரின் அதிரடியான ஆட்டத்தினால், 15 ஓவர்களில் 110/1 என்ற நிலையை அடைந்தனர். ஆமிர் முக்கியமாக அனைவரின் பந்து வீச்சையும் சிதறடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறாக ஒரு பந்தை ஏறியடித்த ஆமிர், பிரசாத்தை நோக்கிச் சென்று, பந்து சென்ற திசையை காட்டி, அடுத்த பந்தும் அங்கே தான் செல்லும் என சைகை செய்தார். வழக்கமாக பந்து வீச்சாளர்கள் தான் இந்த மாதிரி சைகைகள், வார்த்தைகளை உபயோகிப்பார்கள். ஆமீர் மிகவும் அவசரப்பட்டு இம்மாதிரி செய்தார் என்பது அடுத்த பந்திலேயே தெரிந்தது.

அடுத்த பந்தையும் அதே மாதிரி அடிக்க நினைத்தார் ஆமிர். ஆனால், பாவம், தனது ஸ்டம்பை இழந்தார். வழக்கமாக அமைதியான பிரசாத், இம்முறை சும்மா இருக்கவில்லை. ஆமீரை நோக்கி, பெவிலியன் இருக்கும் திசையைக் காண்பித்து அங்கே போ என்றார். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு செல்வதைத் தவிர ஆமீருக்கு வேறு வழி?

இப்படி அதிரடியாக உடனடி அடி தனக்கு கிடைக்கும் என ஆமீர் மட்டுமல்ல, பிரசாத் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.


சச்சின் டெண்டுல்கர் & அப்துல் காதர் - 1989, பாகிஸ்தான்.

தனது முதல் தொடரில் ஆடிய சச்சினை பார்த்து, பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்லியது என்ன தெரியுமா? 'Dudh Pita Bhachcha ..ghar jaake dhoodh pee’ (வீட்டிற்கு போய் பால் குடிடா சின்ன பையா என). சச்சினின் பதிலடி, இளம் வீரர் முஷ்டாக் அகமதினை இரண்டு ஆறு ரன்னுக்கு அடித்தது தான்.

அடுத்து பந்து வீச வந்த அப்துல் காதர், “சின்ன பையன் பந்தை எல்லாம் அடிக்கிறாயே, என்னை அடி பார்க்கலாம்” என சொன்னார். அமைதியாக இருந்த சச்சின் தனது மட்டையினை பேச வைத்தார். அந்த ஓவரில் சச்சின் அடித்த ரன் - 6, 0, 4, 6, 6, 6.

(இந்த ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டதால், அதிகார்ப்பூர்வமாக நடக்கவில்லை. எனினும், ...)


ரவி சாஸ்திரி & மைக்கேல் விட்னி (தேதி தெரியவில்லை)

ஆஸ்திரேலியர்கள் இந்த மாதிரி வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகள் என்பது அனைவருக்கும் தெரியும் (அதை அவர்கள் ஒத்துக்கொள்ளா விட்டாலும்). அவர்களுக்கே அந்த மருந்தினை கொடுத்தார் ரவி சாஸ்திரி.

மைக்கேல் விட்டினி ஒருமுறை 12'வது ஆட்டக்காரராக களத்தில் இருந்தார். பந்தை அவரை நோக்கி அடித்த ரவி, ரன் எடுக்க நினைத்தார். அப்பந்தை தடுத்த விட்டினி, 'நீ கோட்டை விட்டு வெளியே வந்தால், நான் உன் **** தலையை உடைத்து விடுவேன்' என்றார். ரவியின் பதில் "நீ பேசும் அளவுக்கு, பேட்டிங் செய்தால், 12'வது ஆட்டக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்பதே. விட்டினியின் முகம் எப்படி போயிருக்கும்?


கிரன் மோரே & ஜாவித் மியான்டட் - 1992 உலகக்கோப்பை

ஜாவித் இல்லாமல் இந்தத் தலைப்பில் எழுத முடியுமா? கிரன் மோரேவின் அதிக முறையீடுகளின் காரணமாக கடுப்பாகி போன ஜாவித், ஒரு முறை ரன் அவுட்டிலிருந்து தப்பித்தவுடன் குதித்த குதி யாரும் மறந்திருக்க முடியாது. குதித்தது அவருக்கு மட்டுமே மகிழ்ச்சியை கொடுத்தது, கடைசியில் இந்தப் போட்டியில் ஜெயித்ததோ இந்தியா தான்.


சுனில் கவாஸ்கர் & டெனிஸ் லில்லீ - 1981

மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில், 70 ரன்னுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கருக்கு எதிராக லில்லீ LBW அப்பீல் செய்தார். கவாஸ்கர் நடுவருக்கு தனது மட்டையக் காண்பித்து தான் பந்தை மட்டையால் தொட்டிருந்தேன் என உணர்த்தினார். ஆனாலும், லில்லீயோ, பந்து எங்கே பட்டது என கவாஸ்கரிடம் சென்று, தொட்டுக் காண்பித்தார. கடைசியில், முடிவு லில்லிக்கு சாதகமாகவே அளிக்கப்பட்டது.

மெதுவாக பெவிலியனை நோக்கி சென்ற கவாஸ்கரை நோக்கி தனது வார்த்தைகளை வீசினார் லில்லி. அதுவரை பொறுமையாக இருந்த கவாஸ்கர், தனது சக ஆட்டக்காரரான சேத்தன் சௌகானை அழைத்துக்கொண்டு, ஆட்டத்தை விட்டுத்தருவதாக சொன்னார். இது மிகப்பெரிய சர்ச்சையாக இன்னும் பேசப்பட்டு வருகிறது.

பின்னாளில், தனது புத்தகத்தில் இதைப் பற்றி வருத்தப்பட்டு கவாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும்....


பார்திவ் பட்டேல் & ஸ்டீவ் வா

கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது, ஸ்டீவ் வா தனது கடைசி டெஸ்ட் தொடர்ப்பந்தயத்தினை ஆடினார். 4வது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க போராடிக்கொண்டிருந்த வா'விற்கு தன் வயதில் பாதியே ஆன பார்த்திவ் அளித்த 'கசப்பு' மருந்தும் அதற்கு ஸ்டீவின் பதிலும்.

பார்த்திவ்: இன்னும் ஒரே முறைதான் உன்னுடைய 'பெருக்கல்' (sweeping shot) ஆட்டம், அதற்கப்புறம் நீ காலி.

ஸ்டீவ்: கொஞ்சம் மரியாதையுடன் பேசு. நான் 18 வருடங்களுக்கு ஆடத்துவங்கிய போது, நீ இன்னும் படுக்கையில் மூத்தி*** போய்க் கொண்டிருந்தாய்.

ரொம்பத்தான் கசந்து விட்டது போல அவருடைய சொந்த மருந்து?



இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அதையெல்லாம் எழுத எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ, உங்களுக்கு படிக்க பொறுமை இருக்காது என்பதால் தான் வெறும் இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்ட பதிவு இது!

நன்றி!

2006/05/03

ஓடும் இயந்திரம் புத்தியா சிங்

நேற்று 5 வயதுச் சிறுவன் புத்தியா சிங் தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளான். விடியற்காலை 4 மணிக்கு பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து ஓட ஆரம்பித்த இச்சிறுவன் புவனேஸ்வர் நகரை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தான். இச்சாதனையை லிம்கா சாதனை புத்தகம் அங்கீகரித்து, தனது அடுத்த பதிப்பில் இதை சேர்த்து பதிப்பதாக அறிவித்துள்ளது.

உண்மையில் 70 கி.மீ. வரை ஓட இருந்த புத்தியா, 65 கி.மீ. தூரத்தை கடந்த பின்பு (5 கி.மீ. முன்பே) ஓட முடியாமல் சுருண்டு விழுந்தான். சுமார் 300 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் புடை சூழ, வழியெங்கிலும் மக்கள் உற்சாகப்படுத்த இவன் இச்சாதனையை படைத்தான்.

யாரிந்த சிறுவன்? ஒரிசா மாநிலத்தில் உள்ள கொளதம் நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியைச் சேர்ந்தவன் தான் புத்தியா சிங். தகப்பன் இல்லாத இவனை, வேறு யாரிடமோ விற்க இருந்த இவன் தாயிடமிருந்து பிரஞ்சா சிங் என்பவர் இவனை தனது வளர்ப்பு மகனாக தத்து எடுத்துகொண்டார்.

பிரஞ்சா சிங் நடத்தும் ஜூடோ மையத்திற்கு இவனை கூட்டிச்சென்ற இவர், இவனது திறமையை கண்டறிந்தது தற்செயலாகத்தான். ஒருமுறை இவன் சில கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததால், இவனை மைதானத்தை சுற்றி ஓடச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஏதோ வேலையாக வெளியே சென்றவர், புத்தியாவை ஒட சொன்னதையே மறந்து விட்டார். 3 மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, புத்தியா தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தானாம். 3 மணி நேரம் ஓடியும், ஒரு களைப்பும் அடையாத இவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்த இவர், பின்னர் மராத்தான் ஓட்டத்திற்காக இவனை தயார் படுத்தி இருக்கிறார்.

ஒரிசா அரசாங்கத்திற்கும் பிரஞ்சா சிங்கிற்கும் சில பிரச்சினைகள் உருவாகின. அரசாங்கம் இச்சிறுவனுக்காக மாதம் ரூ. 500 உதவித்தொகையாக அறிவித்தது. அதே சமயம், இந்த சிறு வயதில் அவனை இவ்வாறு 'அதிக' சிரமத்திற்கு உட்படுத்துவதும் சரியா என கேள்வியையும் எழுப்பியது.

இந்த கேள்வியால் கோபமடைந்த பிரஞ்சா, வேண்டுமானால் அரசாங்கமே அவனை தத்து எடுத்து கவனித்துக்கொள்ளட்டும் என சொல்லியிருந்தார்.

அரசாங்கமோ போன வருடம் ஒரு நிபுணர் குழு அமைத்து, அந்த நிபுணர்கள் பரிந்துரைப்பின் படி புத்தியாவிற்கு போஷாக்கன உணவும், ஓட வேண்டிய அதிக பட்ச தூரத்தையும் சொல்ல வேண்டியது.

இதெல்லாம் கடைப்பிடிக்கப் பட்டதா என தெரியவில்லை. ஆனால், புத்தியாவை கேட்டால், "நான் ஒருசாவிற்காகவும் இந்தியாவிற்காகவும் ஓடிக்கொண்டே இருப்பேன்" என்கிறான் தனது மழலைப் பேச்சில். ஓடிய பின் இவனை சோதித்த இவனது டாக்டர், இவனது இதயத்துடிப்பு மற்றும் தசைகள் எல்லாம் சாதாரணமான அளவிலேயே இருப்பதாகத் தெரிவிக்கிறார். இதெல்லாம் ஒரு அதிசயம் என்றே அனைவரும் நினைக்கின்றனர்.

இந்த ஓடும் இயந்திரம், பெரிய அளவில் ஏதாவது சாதனை படைக்குமா அல்லது வழக்கம் போல சில காலத்திற்கு பிறகு காணாமல் போய் விடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

பி.கு. - இச்செய்தியை தூர்தர்ஷனைத் தவிர வேறு எந்த டிவியும் காட்டவில்லை. தெரியாதவர்களுக்காகவும், பார்க்காதவர்களுக்காகவும் இப்பதிவு.

2006/05/02

கருவிப்பட்டை சோதனை

ஒரு வழியாக கருவிப்பட்டையை நிறுவியாகி விட்டாயிற்று. அது வேலை செய்வதை சோதிக்கவே இப்பதிவு. இனி எனது பதிவுகளும், தமிழ்மண முகப்பில் தெரியவருமா? (யாராவது தப்பித் தவறி பின்னூட்டமிட்டால்?).

இதற்கெல்லாம் ஒரு பதிவா என்று யாரும் கோபிக்க வேண்டாம்! என்னைப் பொறுத்த வரை இது பெரிய சாதனையே.....

நன்றி

2006/05/01

வெளிநாட்டில் வேலையா? - சில தெரியாத / புரியாத விஷயங்கள்

சில நாட்களுக்கு முன் சந்தித்த சில புது துபாய்வாசிகளைப் பற்றிய பதிவு இது.

மேலும், வேற்று நாட்டில் வேலை தேடும் எத்தனையோ நண்பர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிடவும் இந்தப்பதிவை உபயோகித்துக் கொள்கிறேன்.

போன வாரம் புதிதாக இங்கு வேலைக்குச் சேர்ந்த சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்னிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசினார்கள் (அல்லது பேச வைத்தேன்).

இவர்கள் வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் அனைவருக்கும் காபி, டீ அளித்து கவனித்துக்கொள்ளும் வேலை. ஏறக்குறைய உணவு பரிமாறும் சிப்பந்தி (சர்வர்/பட்லர்) வேலை போல. சிலர் சுத்தம் செய்பவர்கள் (cleaners).

இவர்கள் அனைவரும் ஒரு பிரதிநிதி (ஏஜென்ட்) மூலமாக இங்கு வந்தவர்கள். ஒவ்வொருவரும், ரூ. 60,000 முதல் 1 லட்சம் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் சொல்லப்பட்ட வேலை - ஒரு ஓட்டலில். ஆனால், அவர்கள் ஒரு ஒப்பந்தக்கார நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒருவர் சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் மேற்பார்வையாளராக பணி செய்து கொண்டிருந்தாராம். சுமார் 10,000 வரை சம்பாத்தித்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கிட்டத்தட்ட அதே அளவு சம்பள வேலைக்கு இங்கு வந்திருக்கிறார் - உணவு பரிமாறும் சிப்பந்தி வேலை பார்க்க. அவரிடம் சொல்லப்பட்டது ஓட்டலில் மேற்பார்வையாளர் வேலை! ஆனால்?

அவர் ஒரு பட்டம் மற்றும் உணவு வழங்குவதில் உள்ள படிப்பு (Catering Tech. Diploma) படித்தவர். அதனால் அவருக்கு அளிக்கப்பட்டது 700 தி. சம்பளம். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு உடனே இங்கு வந்து விட்டதாக சொன்னார்.

அவரிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இங்கு இந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு வந்தீர்கள் என்பதே. 'தெரியாமல் வந்து விட்டேன்' என்ற வழக்கமான பதிலே கிடைத்தது.

மற்றுமொருவர், சவூதி அரேபியாவில் 10 வருடம் அனுபவம் உள்ளவர். அவர் அங்கு காசாளராக வேலை பார்த்ததாக சொன்னார். அரேபிய மொழியை நன்றாக பேசுகிறார். அவருக்கு சம்பளம் 500 தி. மட்டுமே. அவர் கொடுத்த பணம் 70,000 ரூ.

இவரிடம் கேட்டதற்கு, பணம் கொடுத்து வேலைக்கு ஒத்துக்கொள்வதானால் ஒத்துக்கொள், இல்லாவிட்டால், உன் பின்னால் தயாராக இருக்கும் ஆளுக்கு கொடுத்து விடுவோம் என சொன்னார்கள், அதனால் ஒத்துக்கொண்டு விட்டேன் என்றார்.

மற்றுமொருவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக (salesman) பணிபுரிந்து வந்தாராம். அவர் இங்கே செய்வது சுத்தம் செய்யும் வேலை. சம்பளம் 350 தி. கண்டிப்பாக சென்னையில் இதை விட நிறைய சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பார். அவரும் ரூ. 80,000 கொடுத்து தான் வந்திருக்கிறார். கேட்டதற்கு, இங்கு ஏற்கனவே இருக்கும் அவரது அண்ணன் சொல்லித்தான் வந்தாராம். இது பரவாயில்லையா என்றதற்கு, 'வேறு என்ன செய்வது' என்பதே பதிலாக கிடைத்தது.

இவர்களுடன் வந்த அனைவருமே இப்படித் தான் ஒரு தொகையினைக் கொடுத்து இங்கு வந்திருக்கின்றார்கள். ஒன்று செய்த நல்ல வேலையை விட்டுவிட்டு அல்லது இங்கு அந்த வேலையினை விட நல்ல வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இப்படி அடிக்கடி இங்கே நடப்பதை பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?

முதலாவது முக்கியக்காரணமாக நான் எண்ணுவது இதற்கு முன் இங்கு வரும் இப்படிப்பட்ட ஆட்கள்.

இவர்கள் வந்தவுடன் உண்மையான நிலையைக்கண்டு குமுறுவார்கள் (நமது மேற்கண்ட புது நண்பர்களைப்போல). சில வருடங்களுக்குப் பிறகு பழகிவிடும், ஊருக்கு விடுமுறைக்கு செல்வார்கள். எப்படி தெரியுமா? பகட்டான குளிர் கண்ணாடியும், புத்தம்புதிய கைத்தொலைபேசியும், வாசனை திரவியங்களுமாக. (நமது வெற்றிக் கொடி கட்டு வடிவேலு ஞாபகம் வருகிறதா?). தனது வீட்டு மக்களிடமும், நண்பர்களிடமும், தான் பட்ட அவதிகளையும் தான் செய்து வரும் உண்மையான வேலையையும் மறைத்து விடுவார்கள்.

வீட்டு மக்களிடம் மறைப்பது ஒரு நல்ல எண்ணதினால் தான் என்றாலும், மற்றவர்களிடம் மறைக்கப்படும் போது, அவர்களுக்கும் தானும் வெளிநாட்டில் வேலை பார்த்து இதே மாதிரி 'பந்தா' காட்டலாம், வசதியாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. சில பேர் இங்கு இருக்கும் உண்மை நிலையை அங்கு சொல்ல முற்பட்டாலும், அதை நம்பத் தான் ஆளில்லை. ஏனெனில் பெரும்பான்மை தானே எப்போதும் ஜெயிக்க முடிகிறது?

அப்படிப்பட்ட பந்தாவிற்கும், ஓரளவு வசதியான வாழ்விற்கும் அவர்கள் கொடுக்கும் உண்மையான விலை தான் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகிறது. குழந்தையின் மழலைப் பேச்சு, மனைவியின் அன்பு, பெற்றோருடைய பாசம், நண்பர்களுடன் உற்சாகம் - இவை அனைத்தையும் இழந்து தவித்து அவர்கள் சம்பாதிப்பது - அந்த ஓரிரு மாதம் விடுமுறையும், அதன் சந்தோஷமும் தான்.

அந்தப் போலியான சந்தோஷத்தை உண்மை என நினைத்து, தானும் அப்படி வெளிநாடு போக வேண்டும் என ஆசையில் இருக்கும் நண்பர்கள் தான் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள். பத்திரிக்கைகளில் இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் கதைகளை நிறைய படிக்கிறோம். சேரன் தனது 'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் ஒரு புதிய வழியையும் சொல்லியிருந்தார். ஆனாலும்?

இந்த நிலை முக்கியமாக கீழ்தட்ட வேலை செய்பவர்களுக்கே ஏற்படுகிறது. மற்றவர்கள் அவ்வளவாக ஏமாற்றப்படுவதில்லை அல்லது ஏமாறுவதில்லை.

இவைகள் நிகழாமல் தடுக்க முடியும். மேற்கண்ட நான் சொன்ன ஆட்கள், நிறைய துணை பிரதிநிதிகளிடம் சிக்கியுள்ளனர். இவர்களை வேலையில் அமர்த்தி இங்கு அனுப்பும் அனுமதியைப் பெற்றது மும்பையில் இருக்கும் ஒரு வேலையளிக்கும் நிறுவனம். இவர்களிடம் நேரடியாக சென்றவர்கள் அளிக்க வேண்டிய 'சேவை'க் கட்டணம் வெறும் 30 அல்லது 40,000 மட்டுமே. இந்த துணை பிரதிநிதிகள் கடலூர், கோவை மற்றும் சென்னையில் இருந்து கொண்டு, மேற்கொண்டு பணம் வாங்கிக்கொண்டு, இவர்களை மும்பைக்கும் அனுப்புகிறார்கள். கடலூர் போன்ற இடங்களில், மேற்படி தொகை அதிகமாகவும், சென்னையில் குறைவாகவும் இருக்கிறது.

வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்கள் நேரடியாக வேலைக்கும் பணியமர்த்தும் பிரதான நிறுவனத்தை அணுகினால் துணை பிரதிநிதிகளுக்கு அளிக்கும் 'அதிக' கட்டணத்தை தவிர்க்கலாம்.

இரண்டாவது, அப்படி உரிமை பெற்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மையை வெளியுறவுத்துறையிடம் உறுதி செய்துகொள்ளலாம். இவர்களுக்கு உரிமம் எண் உள்ளதா, அப்படி இருக்கிறது என்றால் அது சரியானது தானா போன்ற தகவல்கள்.

மேலும், சொல்லப்படும் வேலை மற்றும் சம்பளம் என்ன என்பதை எழுத்து மூலம் வாங்கிக்கொள்வது மிகவும் நல்லது. இவையெல்லாம், இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளே. ஆனால், நடைமுறைப் படுத்துவது வேலை தேடும் நபர்களிடம் தான் உள்ளது. குடியேற்ற துறை இவைகளை கட்டாயமாக்கப்போவதாக எங்கோ படித்தேன்.

என்ன தான் அரசாங்கம் கட்டாயமாக்கினாலும், இங்கு வரத் துடிக்கும் எத்தனையோ பேர் இருக்கும் வரை இந்த மாதிரி கதைகள் கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும் என தோன்றுகிறது.